பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

இப்படியாகத்தானே எழுதியிருந்த அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்க அம்பலவாணருக்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. மேலே, இன்னும் மேலே, மேலே மேலே இன்னும் மேலே மேலே என்று அவர் பறந்துகொண்டிருக்கையில், 'சார், தந்தி!' என்று சைக்கிள் மணி ஒலியுடன் தந்திச் சேவகன் ஒருவனின் குரலும் வாசலிலிருந்து கலந்து வர, ‘வா, உள்ளே!' என்று வேண்டா வெறுப்புடன் அவனை வரவேற்று, அவனிடமிருந்த தந்தியை விரும்பா மனத்துடன் வாங்கிக்கொண்டு, அவர் அவனை வெளியே அனுப்பி வைப்பாராயினர்.

தந்தியில் கண்டிருந்ததாவது:

‘அப்பா, எனக்குக் கோடை விடுமுறை விட்டு
விட்டார்கள். நாளைக் காலை நான் ஊருக்கு
வருகிறேன். ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்பி
வைக்கவும் -அம்சா.’

இந்தத் தந்தியைப் படித்ததும், ‘போயும் போயும் இப்பொழுதுதானா இவளுக்குக் கோடை விடுமுறை விட வேண்டும்? அந்தக் காரியத்தை இவளுக்குத் தெரிந்து செய்வது அவ்வளவு நன்றாயிராது போல் இருக்கிறதே! இதற்கு என்ன செய்யலாம்?' என்று ஒரு கணம் யோசித்து, மறுகணம், ‘இவள் இங்கே வந்து இருக்கப் போவதோ இரண்டே மாதங்கள்; அந்த இரண்டு மாதங்களைத் தாங்கும் அளவுக்கு இவளிடம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி வைத்துவிட்டால் போகிறது!' 'பிறருக்கு நன்மை தருமாயின் பொய் சொல்லலாம்' என்று சொன்னவர்கள், ‘தனக்கு நன்மை தரும் என்றாலும் பொய் சொல்லலாம்' என்று சொல்லாமல் விட்டது யார் குற்றம்? அவர்கள் குற்றமா, தன் குற்றமா? விடு, கவலையை! இன்றே ஆனந்திக்கு எழுது ஒரு கடிதத்தை, ஆனந்தமாக!’ என்று தம்மைத் தாமே தைரியப் படுத்திக்கொண்டு, அன்னார் அந்த ஏந்திழைக்கு அக்கணமே ஓர் எழில் மடல் தீட்டுவாராயினர்.