பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

61

திலகவதியாரைத் திருமணம் முடிக்க இருந்த சேனாபதி கலிப்பகையார் போர்க்களத்தில் இறந்து விடுகிறார். 'மணம் செய்து கொள்ளா விட்டாலும் மனத்தால் நான் அவருக்கே உரியவள், ஆதலால் அவர் இறந்த பின்னர் வேறு ஒருவரைத் திருமணம் புரியேன்' என்று வைராக்கிய சித்தத்தோடு வாழ்கிறார் அவர். திருமடம் ஒன்று அமைத்து, ஆலயத் திருப்பணி முதலியன செய்து வந்த இவர், தம் தம்பியாம் மருள்நீக்கியார் மருள் நீக்கம் அடையாது வாழ்வது குறித்து வருந்தி நைகிறார். இவர் படும் வருத்தம் தாளாது, இறைவன் தருமசேனரின் மருள் நீக்க முனைகிறார். இறை அருளால் தருமசேனரை சூலை நோய் பற்றுகிறது. எந்த வைத்தியம் செய்தும் தீராத காரணத்தால், தமக்கையிடம் ஓடி வந்து வணங்கி, அவர் அளித்த நீற்றை அணிந்து, நீரை உண்டு, அதிகை வீரட்டனாரை வணங்குகிறார்.

கூற்றயினவாறு விலக்ககலீர்,
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கி இட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை எம்மானே

என்று துவங்கும் திருப்பதிகமும் பாடுகிறார். சூலை நோயும் அகல்கின்றது. இப்படித்தான் தருமசேனர் மீண்டும் சைவராகி நாவுக்கரசர் என்னும் நல்ல புகழோடு வாழ்கிறார். சமணர்கள் பேச்சைக் கேட்டு அரசனும் இவரை நீற்றறையில் வைக்கிறான்; நஞ்சு கலந்த உணவு ஊட்டுகிறான்; யானைக் காலால் இடற வைக்கிறான்; கல்லில் கட்டிக் கடலில் எறிகிறான். எல்லா இடர்களினின்றும் இறை அருளால் தப்புகிறார். கோயிலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் உழவாரப் பணி செய்தே வாழ்கிறார். மன்னன் மகேந்திர