பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தேய்கிறது.' இது என்ன பேச்சு?“ இப்படி ஒரு நண்பர் என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார். என்ன சொல்வது என்று நான் தீர்மானிப்பதற்குள் நண்பர் ஒரு போடு போட்டார்.

"திருப்பதி ஆசாமியைப் பற்றி வேண்டுமானால் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும். எங்கள் முழு முதற்கடவுளாகிய சிவபெருமான் தலையிலேயே உங்கள் தொண்டைமான் கைவைத்து விட்டாரே! என்ன சொல்கிறார் தெரியுமா, சொன்னவாறு அறிவார், அவர்தான் ஐயா! எங்கள் சிவபெருமான், ஒரு 'மாட்ரிமோனியல் பீரோ' நடத்து கிறாராம். கேட்டீர்களா கதையை“

இப்படி நண்பர் கசப்பைக் கக்கியதும், இத்தாலிய நாட்டுப் பாதிரி ஒருவர் சொன்னது எனக்கு நினைவு வந்தது. பாதிரியார் நமது நாட்டிற்குப் புதியவர், ஏதோ தற்செயலாய் ரயிலில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சொன்னார். 'உங்கள் நாட்டுத் தத்துவஞானம் உலகப் புகழ் பெற்றது, உண்மைதான். ஆனால் இவ்வளவு தத்துவ உணர்வு பெற்ற நீங்கள் எப்படி ஆண்டுதோறும் உங்கள் கோயில்களில் திருக்கலியாண உற்சவம் கொண்டாடுகிறீர்கள்? மனவாக்குக் கடந்த அருவமாய் உள்ள இறைவனுக்கு மனைவி ஏது? கலியாணம் ஏது? இதுதான் எனக்குப் புரியவில்லை.'

எப்படி அவருக்குப் புரியும்? நம்முடைய நாட்டில் பிறந்து, நம்முடைய மரபிலே வளர்ந்த என் நண்பருக்கே புரியவில்லையே!

கடவுள் எங்கும் இருக்கிறான் என்று பேச்சளவில் சொல்லுகிறோம். ஆனால் அவன், இங்கே நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், இருக்கிறான் என்பதை உணர்ந்து, ஏற்றுக் கொள்வதற்கு தயங்குகிறோம். இந்தத் தயக்கமே, புராணக்கதைகளை உள்ளவாறு அறிவதற்குத் தடையாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள் இப்படித் தயங்கவில்லை.