பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

வேங்கடம் முதல் குமரி வரை

பாவங்களைக் கழுவிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் கேட்கிறான் நெடுந் தொலைவிலுள்ள ஒருவன். அவனோ முடவன். அவனால் விரைவாக நடப்பதோ இயலாது. என்றாலும் முயற்சியை விட்டுவிடவில்லை. துலாமாதம் பிறந்ததுமே, ஊரை விட்டுப் புறப்பட்டு விடுகிறான். நடக்கிறான் பல நாட்களாக. ஆனால் அவன் மாயூரம் வந்து சேர்வதற்குள் துலாமாதம் கழிந்து விடுகிறது. அவன் காவிரிக் கரை வந்து சேர்கின்ற அன்று கார்த்திகை மாதம் பிறந்து விடுகிறது. 'ஐயனே என்ன செய்வேன்? ஒரு நாள் பிந்தி வந்துவிட்டதனால் அல்லவா என் பாவச் சுமையைக் கழுவ முடியாது போய்விடுகிறது' என்று பிரலாபிக்கிறான். முடவன் குரல் விழுகிறது இறைவன் திருச் செவியில், அவன் அளப்பரிய கருணை வாய்ந்தவன் ஆயிற்றே, 'சரி இந்தக் கடைமுக ஸ்நான கன்செஷனை” இன்னும் ஒருநாள் நீட்டித் தருகிறேன். கார்த்திகை மாதம் முதல் தேதியில் முழுகினாலும் பலன் உண்டு' என்று அறிவிக்கிறான்.

ஆதலால் இன்றும் துலா மாதத்தில் மாத்திரம் அல்ல, முடவன் முழுக்கு என்னும் கார்த்திகை முதல் தேதியிலும் காவிரியில் முங்கி முழுகிப்பாபங்களைக் கழுவலாம் என்பது நம்பிக்கை. நம்மில் பலருக்கு உடலில் முடம் இல்லா விட்டாலும், உள்ளத்தில் முடம் உண்டே . ஆதலால் கடைமுகத்திலோ அல்லது முடவன் முழுக்கன்றோ சென்று காவிரியில் முழுகி எழுந்துவிட வேண்டும். கார்த்திகை இரண்டாம் தேதிக்கு இந்த ‘கன்செஷன்' கிடையாது என்பது மட்டும் ஞாபமிருந்தால் போதும் இந்தக் கடைமுக ஸ்நானப் பெருமையுடைய மாயூரத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

மாயூரம் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய ரயில் நிலையம். போஸ்டாபீஸ்காரர்கள் எல்லாம்கூட மாயூரம் என்ற பெயரையே உபயோகிக்க இந்திய ரயில்வேக்காரர்கள் மட்டும் 'மாயவரம்' என்ற பெயரை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? ஆனால் ஆங்கிலத்தில்