பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வேங்கடம் முதல் குமரி வரை

இதைவிட எல்லாம் அழகு, அவசரத்தில் விலகிய நந்தி கொஞ்சம் ஒருக்களித்துச் சாய்ந்து கிடப்பது. நந்தி விலகிய வரலாற்றை நம்ப மறுக்கும் அன்பர்கள்கூட இதைக் கண்டு, வாய்மூடி மௌனியாக நிற்க வேண்டியதுதான். கோபுர வாயிலைக் கடந்து நந்தி மண்டபம் வந்து, இறை அருளிலே நம்பிக்கை அதிகம் பிறக்கச் செய்யும் நந்தியெம்பெருமானையும் வணங்கிய பின் கோயிலுள் நுழையலாம். கோயில் நிரம்பப் பெரிய கோயிலும் இல்லை, சின்னஞ் சிறிய கோயிலும் இல்லை. மகா மண்டபத்திலே தெற்கு நோக்கி அந்தச் சிவகாமிநாதன் சிவகாமியோடு நடம் ஆடிய கோலத்தில் நிற்கிறான். அந்தத் திருவுருவைப் பார்க்கும் போது, அவரது திருவடியில் குடமுழாவையும், பஞ்சமுக வாத்தியத்தையும் முழக்கும் பூதகணங்களையும் பார்க்கத் தவறி விடாதீர்கள். நீங்கள் தவறினாலும் இத்தலத்துக்கு வந்த சுந்தரர் ஞாபகமூட்டத் தவறமாட்டார்.

மானை நோக்கியோர்
மாநடம் மகிழ மணிமுழா
முழக்க அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி
அடைந்தேன் செழும்பொழில்
திருப்புன்கூர் உளானே.

என்பதைப் பாடிக் காட்டியே நமக்கு அறிவுறுத்துவார். நடராஜ தரிசனம் செய்தபின் இங்கே கோயில் கொண்டிருக்கும் சௌந்திரநாயகியாம் அம்மையையும் கண்டு வணங்கலாம். இத்தலத்துக்குச் சிவலோக நாதனை விடப் பெருமை தேடித்தந்த அந்தத் திருநாளைப் போவாராம் நந்தனையும் செப்புச் சிலை வடிவில் கண்டு மகிழலாம்.

இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார், அப்பர் வந்திருக்கிறார். ஆளுக்கு ஒரு பதிகம் பாடிப் பரவி இருக்கிறார்கள்.