பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

183

வருஷத்துக்கு 5000 கலம் நெல் கிடைக்கிறது. ரூ.2000 ரொக்கமாக வேறே வருகிறது. போதாதா, நெல்லுக்கு நல்லவிலை இருக்கும் இக்காலத்தில்?

இதில் பதினைந்து கல்வெட்டுக்கள் உண்டு. கல்வெட்டுக்களில் இவ்வூர் வழுகூர் என்று இருக்கிறது. திருவழுதூர் நாடு என்றும், ஜயங்கொண்ட சோழ மண்டலத்தைச் சேர்ந்ததென்றும் குறிக்கப் பெற்றிருக்கிறது. இத்தலத்து இறைவனை வீரட்டானாம் உடையார், வழுவூர் நாயனார் என்றெல்லாம் கல்வெட்டுகள் கூறுகின்றன. கோயிலில் விளக்கிட, திரும்வெம்பாவை ஓத எல்லாம் நிபந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மதில், கோபுரம் முதலியவற்றை அழகப் பெருமாள் பிள்ளை கட்டியது என்றும் அறிகிறோம். இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பல நிபந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தான் அம்பிகையின் கோயில் கட்டப்பட்டது என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. விஜய நகர மன்னன் வீரபொக்கண்ண உடையார் காலத்தில் 1324ல் காவிரி வெள்ளத்தால் சேதம் அடைந்த நிலங்களுக்குத் தீர்வை வஜா ஆகியிருக்கிறது.

முன்னர் எல்லாம் இக்கோயிலுக்குள் சென்றால் பிக்ஷாடனர், கஜசம்ஹாரர், மோஹினி முதலிய திருவுருவங்களின் வஸ்திரங்களைக் களைந்து மூர்த்திகளின் வண்ணத்தைக் காட்டமாட்டார்கள் அர்ச்சகர்கள். இக்கோயிலில் இருபது வருஷகாலமாக இருந்த ஒரு தருமகர்த்தருக்கு, கஜசம்ஹாரர் பக்கத்தில் உள்ள - அன்னையின் இடையில் முருகன் இருக்கிறான் என்பதே தெரியாதாம். காரணம், அன்னையையும் குமரனையும் சேர்த்தே சேலை கட்டி வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அத்தனை கெடுபிடி பண்ணுகிறதில்லை அர்ச்சகர்கள். விரும்பினால் கஜசம்ஹாரரின் முழுக்