பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

அப்பா எதிர்பார்க்காத ஒரு 'வெடி குண்'டைத் தூக்கிப் போட, அவர் திடுக்கிட்டு, ‘ஏனாம்?’ என்று கேட்க, 'எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் உன் அப்பாவைப் போன்றவர்களின் பிள்ளைகளே இப்படி வந்தால் மற்றவர்கள் எப்படி வருவார்கள்? அதற்காகத்தான் உனக்கு அதிகப்படியான தண்டனை என்று சொல்லி விட்டார் வாத்தியார்!' என்று அவன் விளக்க, அதற்குள் தயாராகிவிட்ட அவர், ‘சரி சரி, வாவா!' என்று அவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்வாராயினர்.

வழியில் ஒரு ரேஷன் கடையையும், அந்தக் கடையை ஒட்டி வெயிலில் வியர்க்க விறுவிறுவிக்க நின்று கொண்டிருந்த 'கியூ'வையும் கண்ட பையன், 'நான்தான் பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகப் போன குற்றத்துக்காக நேற்று வெயிலில் நிற்கும் தண்டனையை அனுபவித்தேன்; இவர்கள் அந்தத் தண்டனையை அனுபவிக்க என்ன குற்றம் அப்பா, செய்தார்கள்?’ என்றான்; 'இவர்கள் இன்னும் குற்றம் செய்யவில்லை; இனிமேல்தான் செய்யப்போகிறார்கள்!' என்றார் தகப்பனார். ‘என்ன குற்றம் செய்யப் போகிறார்கள்?' என்றான் அவன்; ‘அரிசி வாங்கப் போகும் குற்றத்தை!’ என்றார் அவர்.

அடுத்தாற்போல் 'இந்தியா காப்பி ஹெள'ஸை ஒட்டி ஒரு நீண்ட 'கியூ' நின்றுகொண்டிருந்தது. அந்தக் 'கியூ'வைக் கண்ட பையன், 'இவர்கள் என்ன குற்றம் அப்பா, செய்யப்போகிறார்கள்?’ என்றான்; 'காப்பிக் கொட்டை வாங்கப் போகும் குற்றத்தை!' என்றார் தகப்பனார்.

அதற்கும் அடுத்தாற்போல் பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரு 'கியூ' நின்றுகொண்டிருந்தது. அந்தக் 'கியூ'வைக் கண்ட பையன், 'இவர்கள் என்ன குற்றம் அப்பா, செய்யப் போகிறார்கள்?’ என்றான்; ‘பஸ்ஸில் ஏறப்போகும் குற்றத்தை!' என்றார் தகப்பனார்.