பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

127


அப்படி யாரும் சொல்லமாட்டார்களே? அவளுக்கு ராமன் என்றால் ராமன்தானாமே?’ என்றாள் மற்றும் ஒருத்தி.

‘அது அந்த ஜானகிக்கு! இந்த ஜானகிக்கு ராமன் இல்லாவிட்டால் லட்சுமணனாம்; லட்சுமணன் இல்லா விட்டால் ராமனாம்!’ என்றாள் அவள்.

‘சரிதான், அதனாலேதான் அந்தப் பயல் எனக்குக் கலியாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான் போலிருக்கிறது!' என்றாள் இவள்.

இன்ன இடம், இன்ன நேரம் என்று இல்லாமல் ஊர் முழுவதும் எதிரொலித்த இந்த ஊர் வம்பைக் கேட்டதுதான் தாமதம், 'இனி பொறுப்பதில்லை தம்பி, எரிதழல் கொண்டு வா!’ என்று துரியோதனன் சபையில் துள்ளி எழுந்த பீமன் போல் லட்சுமணன் துள்ளி எழுந்தான். அதுதான் சமயமென்று அவனைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த ஒரு 'பெண்ணைப் பெற்ற பாவ'த்தைச் செய்தவர் அவனிடம் தம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்தார். அப்போதிருந்த ஆத்திரத்தில், ‘என்னிடம் இதை ஏன் கொடுக்கிறீர்கள்? என் அண்ணனிடம் கொண்டு போய்க் கொடுங்கள்!' என்று மரியாதைக்காக ஒரு வார்த்தை சொல்லக்கூட அவனுக்குத் தோன்றவில்லை; தானே அதை அவசர அவசரமாக வாங்கிக் கொண்டு அண்ணனைத் தேடி 'ஓடு, ஓடு’ என்று ஓடினான்.

‘என்ன?’ என்றான் ராமன்; 'ஜாதகம்’ என்றான் லட்சுமணன்.

“எதற்கு?' என்றான் அவன்; ‘என் கலியாணத்துக்கு!’ என்றான் இவன்.

‘பண்ணிக்கொள்வதென்று முடிவு செய்துவிட்டாயா?' என்றான் ராமன்; ‘ஆமாம், முடிவு செய்துவிட்டேன்!’ என்றான் லட்சுமணன்.

‘ஏன்?' என்றான் அவன்; 'என்னால் அண்ணிக்கு மாசு கற்பிக்கப்படுவதை நான் விரும்பவில்லை!' என்றான் இவன்.