பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

115

விலகிய நந்தி

கோயில் சந்நிதித் தெருவின் கீழ்க் கோடியில், தேரடியில் ஒரு சிறு கோயில் புதிதாகக் கட்டி அதில் நந்தனைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்தத் தேரடியில் நின்றுதானே நந்தன் கதறி இருக்கிறான். 'வழி மறைத்திருக்கிறதே, ஐயே! மலை போல ஒரு மாடு படுத்திருக்குதே' என்று. நாமும் நம் வண்டியை விட்டு அங்கேயே இறங்கி விடலாம். அங்கிருந்தே நந்தன் தரிசித்த சிவலோக நாதனைக் கண்டு தரிசித்து விடலாம். அன்று நந்தனுக்கு வழி மறைத்த நந்திதான், பின்னர் வழியைவிட்டு வடபக்கமாக விலகி எல்லோரும் தேரடியில் நின்று தரிசிக்க இடம் தந்திருக்கிறதே. இந்த இடத்தில் நின்றே நந்தன் சரித்திரம் முழுதையும் கேட்டு விடலாம், தெரிந்தவர்கள் மூலம். அப்படித் தெரிந்தவர்கள் அகப்படாவிட்டால், பெரிய புராணம் எழுதிய சேக்கிழாரும், நந்தன் சரித்திரக் கீர்த்தனம் பாடிய கோபால கிருஷ்ண பாரதியும் நமக்கு துணை வரத் தயாராயிருக்கிறார்கள். கதை இதுதான்.

சோழவள நாட்டிலே ஆதனூர் என்ற ஒரு சிறிய ஊர். (இன்று மேல ஆதனூர் என்று வழங்குகிறது. திருப்புன் கூருக்கும் மேற்கே இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது) அங்கு ஒரு புலைப்பாடி. அதில் நந்தன்