பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

வேங்கடம் முதல் குமரி வரை

என்று இன்றைய மக்களைப்பற்றியும் குறைப்பட்டிருக்கிறார். இத்தகைய மனிதர்கள் வாழும் இந்த நாளிலே, கடவுளர் வாழ்விலே காதல் அரும்பிற்று என்று நான் சொன்னால் சமயவாதிகள் என்ன என்ன சொல்வார்களோ? எவர் என்ன சொன்னால் என்ன? நான் படித்துத் தெரிந்ததைத் தானே சொல்கிறேன். ஒரு கதை; கைலாயத்தில் பார்வதி பரமேசுவரர்கள் இருக்கிறார்கள், பார்வதி கேட்கிறாள் பரமேசுவரனை, 'ஆமாம்! நமக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷங்கள், யுகங்கள் ஆகிவிட்டன. பூவுலகில் மக்களாகப் பிறந்து மணந்திருந்தாலும் சஷ்டி அப்த பூர்த்திக் கல்யாணம், சதாபிஷேகக் கல்யாணம் என்றாவது நடக்கும். அதற்குக் கூட இங்கு வழியில்லை. எனக்கென்னவோ திரும்பவும் நாமிருவரும் மணம் முடித்துக் கொள்ளவேணும் என்று ஆசையாக இருக்கிறது' என்கிறாள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற நினைக்கிறார் இறைவன்.

அவர் கட்டளை இட்டபடியே காவிரிக்கரையிலே பரதமுனிவர் இயற்றிய வேள்விக் குண்டத்திலே அம்மை பெண்மகளாக அவதரிக்கிறாள். வளர்கிறாள். வளர்ந்து பருவமங்கையானதும் காவிரிக்கரையிலேயே மணலால் லிங்கம் அமைத்துப் பூஜிக்கிறாள். குறித்தகாலம் வந்ததும், அம்மையின் பூஜையை மெச்சி, லிங்கவடிவிலிருந்து இறைவன் மானிட உருவில் எழுகிறார். தமக்கு உரியவள்தானே என்று கொஞ்சலாக, அவளது கரத்தைப் பற்றுகிறார். அம்மையோ நாணிக்கோணிக்கொண்டு 'இது என்ன? இப்படிக் கையைப் பிடித்து, கன்னத்தைக் கிள்ளியா காதல் பண்ணுவது? நாலுபேர் அறிய என் தந்தையிடம் வந்து பெண் பேசி அல்லவா என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? அதையல்லவா நான் விரும்பினேன்' என்கிறாள். 'சரி, அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி மறு நாள் பரத முனிவரை அவரது குமாரியாம் நறுஞ்சாந்து இள முலையைப் பெண்கேட்டுச் சம்பிரமமாகத் திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் அன்னையும் அத்தனும்