பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

127

பயன் தரும் என்கிறார்கள். இத்தலத்துக்கு, இந்த வட ஆலைத் தவிர, அம்மை ஆலயத்தின் பக்கம் இருக்கும் வில்வமும், அகோர மூர்த்தியின் பின்புறம் இருக்கும் கொன்றையும் தல விருட்சங்கள். முக்குளம் உடைத் தாயிருப்பது போல, மூன்று மரங்களையும் உடையதாக இருக்கிறது இக்கோயில்.

இனி இக்கோயிலினுள் நுழைந்து சுவேதவனப் பெருமாளை வணங்கி வெளியில் வரலாம். வெண்காடரை வணங்கிய பின் உட்பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றலாம். அங்கேதான் மேலப் பிராகாரத்தில் இத்தலத்துக்கே சிறப்பான அகோர சிவம் தெற்கு நோக்கி நிற்கிறார். அவரை எதிர் நோக்கியே காளியம்மை சந்நிதி இருக்கிறது. இருவருமே நம் உள்ளத்தில் அச்சத்தை எழுப்புகிறவர்கள்தான். காளியையாவது மற்றக் கோயில்களில் கண்டு வணங்கியிருப்போம். அகோர சிவனை இங்கு மாத்திரம்தான் பார்க்கிறோம்.

கருநிறமும், மணிமாலை புனை அழகும்,
வளை எயிறும், கவினச்செய்ய
எரிசிகையும், நுதல்விழியும், நடைக்கோல
இணையடியும் இலக, எட்டுக்
கரநிலவ மணி, பலகை, வெண்டலை வாள்
கடிதுடி ஏர்சூலம் ஏற்று,
வெருவ மருத்துவனை அடர் அகோர சிவன்.

என்றே தலபுராணம் இவரை வர்ணிக்கிறது என்றால் அதிகம் சொல்வானேன். சிவபெருமானை நல்ல சாந்த சொரூபியாய் அனுக்கிரஹ மூர்த்தியாகத்தான் பல தலங்களிலும் பார்த்திருப்போம். சம்ஹார மூர்த்தியாக இருக்கும்போது கூட முகத்தில் ஆங்காரம் இருக்குமே தவிர, பயங்கரம் இருக்காது. சாது மிரண்டால் என்ன ஆகும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆம்! இங்கு சிவனாம் சாது