பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

வேங்கடம் முதல் குமரி வரை

களும் ஒருங்கே அமைந்து அஷ்டாக்ஷர பூரண சொரூபனாய், எட்டெழுத்தின் முடிவினனாய் அவன் நிற்கும் இடம் இதுவே. அதனால் தான் முத்திதரும் தலங்களில் இது முதன்மையானது. நிரம்பச் சொல்வானேன், இதுவே பூலோகவைகுண்டம். ஆதலால் மற்ற தலங்களில் இருப்பதைப் போல் வைகுண்ட வாசல் இத்தலத்தில் இல்லை. இப்படிக் கண்ணன் எம்பெருமான் மிகமிக மகிழ்ந்து நித்தியவாசம் செய்யத் தேர்ந்தெடுத்த தலம் ஆனதால் இதற்கு கண்ணபுரம் என்றுபெயர். இங்கு கோயில் கொண்டிருக்கும் கண்ணனின் திருநாமம் சௌரிராஜன் என்றெல்லாம் விளக்கம் பெறுவோம்.

இவ்வளவும் தெரிந்து கொண்ட பின்னரே கோயிலுள் நுழையலாம். கோயில் பெரிய கோயில், கிழமேல் 316 அடி நீளமும், தென்வடல் 210 அடி அகலமும், உயர்ந்த மதில்களும் உடையது. இந்த வாயிலைக் கடந்து உள்ளே வந்தால் இடைநிலைக்கோபுரம் ஒன்றிருக்கும். அதுவும் 60 அடி உயரம். இக்கோயிலுக்கு முன்னர் ஏழு மதில்கள் இருந்தன என்றும், ஏழாவது மதில் கிழக்கே பதின்மூன்று மைல் தூரததில் உள்ள கடல்வரை பரவி இருந்தது என்றும், அதனாலேயே 'வேலை மோதும் மதில்சூழ் திருக்கண்ணபுரம்' என்று நம்மாழ்வார் பாடினார் என்றும் சொல்வர். இந்த மதில்களின் தடங்களைக்கூட இன்று காண இயலாது. இந்த மதில்கள் எப்படி அழிந்தன என்பதற்கு ஓர் கர்ண பரம்பரை வரலாறு உண்டு. சிவ பக்தனான சோழன் ஒருவன் இருந்திருக்கிறான். அவனே இம்மதில்களை அழிக்க முற்பட்டிருக்கிறான். மதில் அழிவது கண்டு பொறாத பக்தர் கண்ணபுரத்து அரையர் சௌரிராஜனிடம் முறையிட்டிருக்கிறான். சௌரிராஜன் நின்றநிலையிலேயே மௌனம் சாதிப்பது கண்டு, தன் கைத்தாளத்தை விட்டெறிந்து அவனை உசுப்பியிருக்கிறார். நெற்றியில் வடுப்பட்ட பின்னரும் சௌரிராஜன் சும்மா