பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

வேங்கடம் முதல் குமரி வரை

வெளி வரவேண்டியதுதான். இப்படி, சென்ற வாசல் வழியாகத் திரும்பக் கூடாதென்ற திட்டத்தோடு இருக்கும் கோயில்தான், திரு இடை மருதூர் மகாலிங்கப் பெருமான் கோவில். அந்தத் திரு இடை மருதூருக்கே போகிறோம் நாம் இன்று.

திரு இடை மருதூர், தஞ்சைமாயூரம் ரயில் பாதையில் கும்பகோணத்துக்கு வட கிழக்கே ஆறு மைல் தூரத்தில் இருக்கிறது. ரயிலிலே போகலாம், காரிலே போகலாம், இல்லை பஸ்ஸிலும் போகலாம். ரயில்வேக்காரர்கள் திருவிடமருதூர் என்றே போர்டு போட்டிருக்கிறார்கள். ரயிலைவிட்டு இறங்கி இரண்டு பர்லாங்கு வடக்கு நோக்கி நடந்தால் தெற்கு வாயிலில் கொண்டு விடும். இன்னும் ஒரு பர்லாங்கு கிழக்கு நோக்கி நடந்து கீழக் கோபுர வாயில் வந்து, அங்குள்ள காருண்யாமிர்ததீர்த்தத்தில் நீராடிவிட்டு உள்ளே செல்லலாம். குடைவருவாயிலைக் கடந்ததும், திருவாவடுதுறை ஆதீனத்தார் கட்டளைப்படி மண்டபத்துத் தூண் ஒன்றில் கட்டிவைத்திருக்கும் பலகை ஒன்றைப் பார்க்கலாம். அதில் தலத்தை ரயில்வேக்காரர்களை விட 'அழகாகத்' திருவிடமருதூர் என்று எழுதி வைத்திருப்பார்கள். 'இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் உள்ளே வரக்கூடாது' என்று எச்சரிக்கையும் செய்திருப்பார்கள். திரு இடை மருதூர் என்ற அழகான பெயர்தான் தமிழ் வளர்க்கும் ஆதீனத்தாரால் திருவிட மருதூர் என்று அழைக்கப்படுகிறது. இது கொஞ்சம் வருத்தத்தையே தருகிறது. (இந்த போர்டை எவ்வளவு விரைவில் அகற்றுகிறார்களோ, அவ்வளவுக்கு நல்லது. ) இனி கோயிலில் சுதையால் அமைந்திருக்கும் அழகான நந்தியையும் முந்திக்கொண்டு படித்துறை விநாயகர் நமக்குக் காட்சி கொடுப்பார். வீரசோழன் ஆற்றங்கரைப் படித்துறையில் இருந்தவர் போலும் இவர், மருத மரங்கள் நிறைந்த சோலையின் நடுவே இறைவன் தோன்றி உரோமச