பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

235

அதனாலேயே ஞானசம்பந்த விநாயகர் என்று பெயரும் பெற்றிருக்கிறார். இவர்தான் பிரம்மச்சாரியாயிற்றே. ஆதலால் அவருக்கு மாமனார் வீட்டில் அவ்வளவு அக்கறையில்லை. அவர் தம் தகப்பனார் இருக்கும் இடத்துக்கே வழி காட்டுவார். அன்றும் சம்பந்தருக்கு அப்படித்தானே வழி காட்டியிருக்கிறார். நாமும் அவர் காட்டிய வழியிலே கிழக்குநோக்கி நடந்து வேதபுரி ஈசுவரர் கோயில் வாயிலுக்கு வந்து சேரலாம். சம்பந்தருடன் சேர்ந்து,

தொழுமாறு வல்லார்துயர்தீர, நினைந்து
எழுமாறு வல்லார் இசைபாட, விம்மி
அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மாமடம் மன்னினையே

என்று பாடிக்கொண்டே நாமும் கோயிலுக்குள் நுழையலாம். கோயிலின் வெளிப்பிராகாரத்திலே தென்மேற்குப் பகுதியிலேயே சௌந்தராம்பிகை தனிக்கோயிலில் இருக்கிறாள். இப்படி இவள் தனித்திருப்பதனால்தான், சதுரங்க விளையாட்டு, அதனால் இறைவன் இறைவியரிடையே பிணக்கு என்றெல்லாம் கதை கட்டியிருப்பார்கள் போல் இருக்கிறது. திருக்கடவூரில் அபிராமியின் கோயிலும் இப்படித்தான் இருக்கிறது. அங்கு பிணக்கு என்ற பேச்சு இல்லையே. உண்மையைச் சொல்லப்போனால் அமிர்த கடேசுரர்கூட அபிராமிக்கு அடங்கியவராகத்தானே வாழ்கிறார். நாமும் முதலில் சௌந்தராம்பிகையை வணங்கிவிட்டு வேதபுரி ஈசுவரர் சந்நிதிக்குப் போகலாம். ‘மாமடம்' என்று சம்பந்தர் குறிப்பிடுவதால் மாடக் கோயிலாக இருக்குமோ என்று எண்ணுவோம். இது மாடக்கோயில் அல்ல. ஆனால் வருஷத்துக்கு மூன்று