பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வேங்கடம் முதல் குமரி வரை

ஆத்திரத்தை அறிவேன். ஆம்! அவரையுமே செப்புச் சிலையாக வடித்து மகாமண்டபத்தில் ஒரு மேடைமீது நிறுத்தியிருக்கிறார்கள். ஏதோ கிழ வேதியராக வந்தார் என்பதுதான் வரலாறு. என்றாலும் மூர்த்தியாக நிற்பவர் கிழவராக இல்லை. நல்ல வாலிப முறுக்கோடேயே நிற்கிறார். கையில் ஒரு கோல் பிடித்திருக்கிறார், கோல் ஏதோ நன்கு ஊன்றிக் கொள்வதற்காக ஏற்பட்ட ஒன்று அன்று; அவரது கௌரவத்துக்கு ஏற்ற ஒன்றாகத்தான் இருக்கிறது. கோலின் கைப்பிடியில் அபூர்வ வேலை. பிடியின் இரண்டு புறங்களிலும் இரண்டு கிளிகள் இருக்கின்றன. நல்ல சந்திரசேகர மூர்த்தம். இரண்டு கைகளில் மானும் மழுவும். வலது கையில் ஒன்று அபயகரம்; இடது கை ஒன்று தாழ்ந்து கோலூன்றி நிற்கிறது. நல்ல சோழர் காலத்திய செப்புப் படிமம். இக்கோயிலுக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். அப்பர் வந்திருக்கிறார். சம்பந்தரையும் அவருடன் வந்த அடியவர்களையும் அங்குள்ள வேளாள மக்கள் மிகவும் நன்றாக உபசரித்திருப்பார்கள் போல் இருக்கிறது. ஆதலால் கோயிலைப் பாடவந்த சம்பந்தர் வேளாளரது வள்ளன்மையையும் சேர்த்தே பாடுகிறார்.

வாளார்கண் செந்துவர்வாய்
மாமலையான் தன்மடந்தை
தோள் ஆகம் பாகமாப்
புல்கினான் தொல்கோயில்,
வேளாளர் என்றவர்கள்
வள்ளண்மையான் மிக்கிருக்கும்
தாளாளர் ஆக்கூரில்
தான் தோன்று மாடமே,

என்பதுதான் அவர் பாடிய தேவாரம்.