பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

171

அவர்கள் எழுதியிருப்பதை மாயவரம் என்று மாத்திரம் அல்ல, மாயாவரம் என்றும் படிக்கலாம். அதனால் நம் உளத்துக்கு ஒரு நிம்மதியும் தேடிக்கொண்டே அந்த ஜங்ஷனில் இறங்கலாம்.

இந்தத் தலத்தில் காணவேண்டிய கோயில்கள் மூன்று. துலாமாதம் நீங்கள் சென்றால், காவிரியில் ஒரு முழுக்குப் போட்டு விட்டுத் துலாக் கட்டமாகிய இடபதீர்த்தக் கரையின் வடபக்கத்திலே உள்ள வள்ளலார் கோயிலுக்கே முதலில் செல்ல வேண்டும். இந்தக் கோயிலுக்கு ஒரு சிறிய கோபுரமே உண்டு என்றாலும் பிரசித்திபெற்ற தீர்த்த மண்டபம் இங்கே இருக்கிறது. இங்குள்ள இறைவர் பெயர் வழிகாட்டும் வள்ளல். எவ்வளவு அழகான பெயர்! துன்பமே நிறைந்த இவ்வுலகில் உள்ள மக்கள் எல்லாம் உய்ய நல்ல வழி காட்டும் வள்ளலாக அல்லவா அவர் எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள அம்மை ஞானாம்பிகை, நல்ல வழி காட்டியின் துணை நாடிச் சென்றால் ஞானம் பிறவாமல் இருக்குமா? இங்குள்ள வள்ளலாரையும், ஞானாம்பிகையையும் விடப் பிரசித்தி பெற்றவர் இக்கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்திதான். வழக்கம் போல் யோகாசனத்தில் ஞானமுத்திரைக் கையராகவே எழுந்தருளியிருக்கிறார். என்றாலும் மற்றத் தலங்களைப் போல் அல்லாமல் நந்தி பெருமான் மேலேயே ஏறி உட்கார்ந்திருப்பார் இந்த ஆலமர் செல்வர். இறைவனையே தாங்கும் பெருமை என்னிடம் தானே இருக்கிறது என்று தருக்கித் திரிந்த இடபதேவரின் செருக்கடக்கி, ஞானோபதேசம் பண்ணியவர் இந்தத் தக்ஷிணாமூர்த்தி. அதனால்தான், அவரை ஏற்றியிருக்கிறார்.

மலிதவப் பெருமை காட்டி
வயங்கிடு மற்றோர் கூற்றில்
பொலிதரு சேமேற் கொண்டு
தென்முகம் பொருந்த நோக்கி