பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெறலாம். இக்கோயிலில் இன்னொரு சிறப்பும் உண்டு. காலையில் தொழுதால் வினை அகலும், உச்சி வேளையில் தொழுதால் இப்பிறப்பின் துயர் அகலும். மாலையில் தொழுதால் ஏழ் பிறப்பின் வெந்துயரம் எல்லாம் விடும் என்பர். ஆதலால் மாலை வேளையே செல்லுங்கள்.

இக்கோயிலில் 32 கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்கள் விஜயநகர மன்னர்கள் செய்த திருப்பணிகள், ஏற்படுத்திய நிபந்தங்கள் எல்லாவற்றையும் விரிவாகக் கல்வெட்டுகள் கூறும். இவர்களில் முக்கியமானவன், ராஜராஜசோழன் காரியஸ்தனான தென்னவன் மூவேந்த வேளான் என்பவனே. அவன்தான் கோயிலின் பெரும் பகுதியைத் திருப்பணி செய்திருக்கிறான். இன்று கோயில் கோபுரம் எல்லாம் திரும்பவும் திருப்பணி செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றன. தென்னவன் மூவேந்த வேளான் திரும்பவும் அவதரிக்க மாட்டான். ஆதலால் திருப்பணி செய்யவேண்டியவர்கள் தமிழ்மக்களே என்பதை மட்டும் ஞாபகமூட்டிவிட்டி நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.