பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

வேங்கடம் முதல் குமரி வரை

இரண்டு வாயிலிலும் இரண்டு கோபுரங்கள் உண்டு. தாம் வழக்கம்போல், கோயிலை வலம் வந்து கீழவாயில் வழியாகவே நுழைவோம்.

கோயில் பெரிய கோயில். கோயில் மதில் கிழமேல் 792 அடி நீளம், தென்வடல் 310 அடி என்றால் கொஞ்சம் கற்பனை பண்ணியும் பார்த்துக் கொள்ளலாம் தானே. கோயிலுள் நுழைந்து நீண்டு பரந்து திறந்தவெளியைக் கடந்ததும் வந்து சேருவது, சமீப காலத்தில் நாற்பதினாயிரம் ரூபாய் செலவில் உருவான கல்யாண மண்டபந்தான். எல்லாம் ஒரே சிமிண்ட் மயம். வர்ணங்களை வேறே வாரித் தெளித்திருக்கும். அதில் உள்ள வண்ண விஸ்தாரங்கள் எல்லாம் இருபதாம் நூற்றாண்டு ரகத்தைச் சேர்ந்தவை. இங்கே நீண்ட நேரம் இருந்து பார்க்கும் கலை அழகு இல்லை.

நாம் இங்கு வந்தது முக்குளநீரில் நம்மைத் தோய்த்துக்கொள்ளவே. அப்படி முக்குள நீரில் தோய் பவர்களை தோயாவாம் தீவினை என்பதுதானே நாம் அறிந்த உண்மை. ஆதலால் ‘விறுவிறு' என்று கோயிலின் வலப் பக்கத்தில் உள்ள சூரியகுளம், அக்கினி குளத்திலும் இடப் பக்கம் உள்ள சந்திர குளத்திலும் இறங்கி முங்கி முழுகலாம்.

ஆனால் நமக்கு முன்னமேயே அந்த ஊரில் உள்ளவர்கள் பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும், சோப்புத் தேய்த்துக் குளிப்பதற்கும் இந்தக் குளங்களையே உபயோகித்துக் கொண்டிருப்பர். அதோடு நிரம்பவும் தாராளமாகக் குடங்களை விளக்குவர், வேட்டி சேலைகளைத் துவைப்பர். ஆதலால் நம் போன்றோருக்குக் குளத்தில் குளிக்க உற்சாகம் இராது. ஆகவே, நீரை அள்ளித் தலைமேல் தெளித்தே நம் தீவினைகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் குளங்களில் பெரியது சந்திர குளம்தான். அக் குளத்தின் கீழ்க்கரையிலேயே மிகப் பெரிய வட விருக்ஷம் அதாவது ஆலமரம் இருக்கிறது. இம்மரத்தடியில் செய்யப்படும் ஜபதபம், தானம், பிதிர்க்கடன் எல்லாம் நல்ல