பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

வெண்ணெய் நல்லூர்
அருள்துறையார்

விச் சக்கரவர்த்தி கம்பர் வீட்டிலே ஒரு விசேஷம். அதற்கு ஊரே திரண்டு வந்திருக்கிறது. கம்பரது அத்தியந்த நண்பரானசடையப்ப முதலியாரும் வந்திருக்கிறார். வந்தவர் கூட்டத்தில் ஒரு பக்கத்தில் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து கொள்கிறார். இதைக் கம்பர் கவனிக்கவில்லை . கம்பரது மனைவி பார்த்து விடுகிறாள். உடனே தன் கணவனை அணுகி, 'அண்ணா வந்து, ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருக்கிறார்; அவரை அழைத்து வைக்க வேண்டிய இடத்திலே உட்கார வையுங்கள்' என்று சொல்கிறாள். இதற்குக் கம்பர் சொல்கிறார், 'இப்படி இவரை இன்று சபைக்கு நடுவே வீற்றிருக்க வைத்து விட்டால் போதுமா? அவரை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க மறக்க மாட்டேன்' என்கிறார். இதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு தானோ என்னவோ, பின்னர் தாம் ராமாவதாரம் பாடும்போது தன்னை ஆதரித்த அந்த வள்ளல் சடையப்பரைக் காவியத்திலே பத்து இடங்களிலே கொலு வீற்றிருக்கச் செய்துவிடுகிறார் கம்பர். ராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரரோடு மிதிலை சென்று தங்குகிறார்கள். அன்று பௌர்ணமி, இரவில் நிலவொளி பரந்து வீசுகிறது. எப்படி நிலவொளி பரந்திருக்கிறது? சடையன் புகழ்போல் எங்கும் பரந்திருக்கிறது என்பதே அவருடைய உவமை. இதைச் சொல்கிறார் அழகான ஒரு சொல்லோவியத்தி வாயிலாக,