பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

103

உடையார் கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகளும் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களும், நில அளவை முறைகளும், தலம் மூர்த்தி இவைகளின் அமைப்புகளும் விளங்கும். “இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேசம் திருக்கழுமலம்” என்ற நீண்ட பெயரில் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கும். வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்தியுள்ள நிபந்தங்கள் கணக்கில் அடங்கா. இவற்றையெல்லாம் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு விட்டு விட்டு நாம் திரும்பி விடலாம்.

சீகாழி தோணியப்பரையும், ஆளுடைய பிள்ளையையும் தரிசித்த சூட்டோடேயே ஞானசம்பந்தர் திருமணத்தோடு சிவசாயுஜ்யம் பெற்ற தலமான அந்த நல்லூர்ப் பெருமணத்திற்குமே போய் வந்து விடலாமே. நல்லூர்ப் பெருமணம், ஆச்சாள்புரம் என்ற பெயரோடு இன்று விளங்குகிறது. சீகாழிக்கு வடக்கே பத்து மைல் தொலைவில் உள்ள சிறிய ஊர் அது. பதினாறு வயது நிரம்பிய ஞானசம்பந்தருக்கு, பெருமண நல்லூரில் இருந்த நம்பியின் பெண் ஸ்தோத்திர பூரணியைத் திருமணம் பேசுகிறார்கள். திருமணச் சடங்குகள் நடக்கின்றன. திருமணச் சடங்குகள் முடிந்ததும், மனைவியையும் உடன் வந்த உற்றார் உறவினர் அனைவரையுமே கூட்டிக்கொண்டு கோயிலுள் நுழைந்து ‘காதலாகிக் கசிந்து' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடிக்கொண்டே அங்கு தோன்றிய சோதியிலேயே எல்லோரும் இரண்டறக் கலந்தனர் என்பது வரலாறு. ஞானசம்பந்தரது திருமணக்கோலம் இக் கோயிலில் இருக்கிறது; மிகவும் பிற்பட்ட காலத்தில் செய்து அமைத்த வடிவம் என்றே தோன்றுகிறது. இவரைக் கல்யாண சம்பந்தர் என்கிறார்கள். குழந்தையாகக் கண்ட ஆளுடைய பிள்ளையைக் கல்யாணக் கோலத்திலும் கண்ட திருப்தியோடேயே நாம் இத்தலத்திலிருந்து திரும்பலாம்தானே.