பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

229

இப்படிப் படிக்காசு அருளுவதில் கூட ஒரு சிறு விளயைாட்டுச் செய்கிறார் இறைவன். அப்பர் வாசி இல்லா காசு (கமிஷன் இல்லாது மாற்றக்கூடிய காசு) பெறுகிறார். சம்பந்தர் பெறும் காசோ வாசியுடையது. சம்பந்தர் விடுவாரா?

வாசிதீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர், ஏசல் இல்லையே!

என்று பாடுகிறார். அதன்பின் அவருக்குமே வாசி இல்லாக் காசே கிடைக்கிறது. சம்பந்தருக்கு வாசியுள்ள காசையும் அப்பருக்கு வாசியில்லாத காசையும் ஏன்கொடுக்கிறார் இறைவன். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் சேக்கிழார்.

திருமாமகனார் ஆதலினால்,
           காசு வாசியுடன் பெற்றார்.
                      கைத்தொண்டர் ஆகும்படியினால்
வாசு இல்லாக் காசு படி
           பெற்று உவந்தார் வாகீசர்

என்பார். உண்மைதானே. தொண்டு புரியும் அன்பனுக்கு வாசியுள்ள காசு கொடுத்தால் அவன் கடைத்தேறுவது ஏது? நாட்டில் பஞ்சம் நீங்கும் வரையில் படிக்காசுகள் பெற்றிருக்கிறார்கள் இருவரும். (நமது நாட்டின் நிதி நிலைமையையும் ஐந்தாண்டுத் திட்டச் செலவுகள் பெருகுவதையும் பார்த்தால் இப்படி இரண்டு அடியவரும், இப்படிப் படிக்காசு கொடுக்கும் பெருமானும் இன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.) இப்படி இறைவன் படிக்காசு கொடுக்கிறான் என்ற உடனேயே, இரு சமய குரவர்களும் அந்தத் தலத்திலேயே இரண்டு மடங்கள் அமைத்துக்கொண்டு நீண்ட காலம் தங்கியிருக்கின்றனர். வடக்கு வீதி கீழைக் கோடியில் சம்பந்தர் மடமும், மேலைக் கோடியில் அப்பர் மடமும் இருக்கின்றன. இன்னும், இவர்களுக்குக் காசு கொடுத்த வரலாற்றையெல்லாம் பின்னால் இத்தலத்துக்கு வந்த சுந்தரர் கேட்டிருக்கிறார்.