பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

59

திரிபுரி தகனம் நடந்த இடம்தான் திரு அதிகை. அங்கு கோயில் கொண்டிருப்பவர்தான் அதிகை வீரட்டனார்.

அட்ட வீரட்டங்களில் ஒன்றான இந்தத் திரு அதிகை வீரட்டானம் மிக்க புகழ் பெற்ற தலம். ஊருக்கு அதிகை என்று ஏன் பெயர் வந்தது? அதிகப் புகழ் படைத்த ஊரானதனாலே அதிகை என்று ஆகியிருக்குமோ? திரிபுர தகனம் நடந்த இடம் அதிகப் புகழ் பெற்ற இடம் என்று சொல்ல வேறு ஆதாரமா தேட வேண்டும்? அந்தப் பழைய சங்க காலத்திலேயே இந்த அதிகை மன்னன் அதியமான் என்ற பெயரோடு புகழ் நிறுவி இருக்கிறான். ஒளவைக்கு அமரத்துவம் அளிக்கக் கூடிய தெல்லிக்கனியைக் கொடுத்து, அவன் அருளைப் பெற்றிருக்கிறான். பாடலும் பெற்றிருக்கிறான், இவனையே சிறுபாணாற்றுப் படை என்னும் பத்துப்பாட்டில் ஒரு பாட்டு.

மால்வரைக் கமழ் பூஞ்சாரல்
கவினிய நெல்லி
அமிழ்து விளை தீங்கனி
ஔவைக்கு ஈந்த
உரவுச் சினங் கனலும்
ஒளிதிகழ் நெடுவேள்
அரவக் கற்றானை அதிகன்.

என்று வியந்து கூறுகிறது. ஆம்! அதிகையில் இருந்தவன் அதிகன். இல்லை, அதிகன் இருந்த ஊர் அதிகை என்றே கொள்ளலாம். இந்த அதிகைக்கே செல்லலாம் நாம்.

இத்தலத்துக்குச் செல்ல, விழுப்புரம் கடலூர் ரயில் பாதையில் பண்ணுருட்டி என்ற ஸ்டேஷனில் இறங்க வேண்டும். பண்ணுருட்டி அல்லது பண்ருட்டி. பண்ருட்டி பலாப்பழம் பிரசித்தமானதாயிற்றே. அதனைச் சொன்னாலே நாவில் நீர்ஊறுமே மேலும் பண்ருட்டிப் பொம்மைகள் வேறே அந்த ஊருக்கு அதிகப் புகழைத் தேடித்