பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

215

கரையில் இருக்கிறது. அப்பர் முத்தி பெற்ற தலத்தில் வழிபடுபவர்களுக்கு ஞானம் பிறக்கக் கேட்பானேன்? அதிலும் ஞான விநாயகரே நம்மை எதிர்கொண்டு ஞானம் அருள நிற்கும்போது, முதலில் இந்த விநாயகரை வணங்கிவிட்டுக் கிழக்கே திரும்பி வடக்கே நோக்கிச் சென்றால் புகலூர் நாதர் சந்நிதி வந்து சேருவோம். வாயிலை தொண்ணூறு அடி உயரமுள்ள வாயிலைக் கடந்து சென்றதும் நாம் காண்பது கருந்தாழ்குழலியின் சந்நிதியே. தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் அவள் நின்று சேவை சாதிக்கிறாள். 'பெருந்தாழ் சடை முடிமேல் பிறைசூடி கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து நிற்கும்' கோலத்தில் அம்மையை வழிபடலாம். அம்மையின் அருளை முதல் முதலிலேயே பெற்றுவிட்டோம் என்றால் அதன்பின் இறைவன் அருளைப் பெறுவது அவ்வளவு சிரமமான காரியம் இல்லைதானே. அம்மையின் 'சிபார்சை'ஐயன் தட்டிவிடமுடியுமா, என்ன? இத்தலத்தில் கண்டு பார்க்க வேண்டியவை கேட்டுத் தெரியவேண்டியவை நிறைய இருப்பதனால் விறுவிறு என்று நடந்து கர்ப்பக்கிருஹம் வரை சென்று அங்குள்ள அக்கினீஸ்வரரை கோணப்பிரானை வணங்கிவிடலாம் முதலில். இந்த மூர்த்தியை அக்கினீஸ்வரர் என்றும் கோணப்பிரான் என்றும் அழைப்பதற்குத் தக்க காரணங்கள் உண்டு. அக்கினிபகவான் தவம் செய்து வணங்கிய பெருமான் ஆனதனாலே அக்கினீஸ்வரர் என்று பெயர் பெறுகிறார். அக்கினி தவம் செய்யும்போது, தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக் கொள்கிறார். அதுவே அகழியாக, அக்கினிதீர்த்தமாக இன்றும் இருக்கிறது. இன்னும் பாணாசுரன் தன் தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களை எல்லாம் பெயர்த்து எடுத்துச்சென்று கொண்டிருக்கிறான். அக்கினீஸ்வரர் அவனுக்கு அசைந்து கொடாத போது தன்னையே பலியிட முனைந்திருக்கிறான். அதனைத் தடுத்து அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக்கொண்டதாகக் காட்டத் தலைவளைந்திருக்கிறார்