பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

35

உருவமாக நிற்கிறான் என்று சேக்கிழார் பாடிப் பரவி மகிழ்கிறார். பயிலும் சுடர் ஒளி மூர்த்தி பங்கயக்கண்ணன் என்று நம்மாழ்வார் பாற்கடல் சேர்ந்த பரமனைக் குறித்தால், திருத்தக்கத்தேவர் சுடரிற் சுடரும் திருமூர்த்தி என்றே பாடுவார். இப்படியே அடியார்களும் கவிஞர்களும் இறைவனைப் பொங்கழல் உருவனாகவே காண்கிறார்கள். இந்த அனல் வழிபாடே பின்னர் திருவிளக்கு வழிபாடாக மக்களிடையே இன்றும் நிலைத்திருக்கிறது. இச்சிறிய திருவிளக்கு வழிபாடே, பெரிய கார்த்திகைத் திருநாளாக அண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது.

அண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம் ஓர் அற்புதமான அனுபவம். கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று லக்ஷக் கணக்கான மக்கள், ஆண் பெண் பிள்ளைகள் எல்லாம் அண்ணாமலையார் கோயில் பிராகாரத்திலும், நகரின் தெருக்களிலும், வீடுகளின் மாடிகளிலும் குழுமியிருக்கின்றனர். சரியாய் மாலை ஆறு மணிக்கு, முழுமதி வானில் எழுந்து கோபுர உச்சியைத் தடவி நிற்கிறது. அந்தச் சமயத்தில் கோயிலுள்ளே பஞ்ச மூர்த்திகளும் மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். அதிர்வெடி யொன்று கிளம்புகிறது வானை நோக்கி. ஐந்து கற்பூர ஆரத்தித் தட்டுகளை உயர்த்துகிறார்கள் அர்ச்சகர்கள். அதே சமயத்தில் அண்ணாமலையின் உச்சியில் உள்ள கற்பூரக் கொப்பறையிலிருந்து சுடர் எழுந்து வான் நோக்கி நிமிர்கிறது. "அரோகரா, அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷம் மக்களிடையே எழுகிறது உச்ச ஸ்தாயியிலே. பார்ப்பவர் உடல் புல்லரிக்கிறது; உள்ளம் விம்மிப் பெருமிதம் அடைகிறது பொங்கழல் உருவனைக் காணுவதால்.

இத்தனை அனுபவத்திற்கும் நிலைக்களனாய் இருப்பது தான், வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை என்னும் தலத்திலே உள்ள அண்ணாமலையார் கோயில். இக்கோயில் சுமார் இருபத்து