பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வேங்கடம் முதல் குமரி வரை

அப்படித் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. ஏதாவது குயுக்திபண்ணி இறைவன் முடியைக்கண்டு விட்டதாகச் சொல்ல விரும்புகிறார்.

அந்தச் சமயத்தில் ஒரு தாழம்பூ தலை கீழாக வருகிறது. எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டால், இறைவன் முடியிலிருந்து வருகிறேன் அதிலிருந்து நழுவி கற்ப கோடி காலங்கள் ஆகிவிட்டன என்று சொல்கிறது தாழம்பூ. அதைச் சரிக்கட்டுகிறார் பிரம்மா. தன்னை இறைவன் முடியிலிருந்து பிரம்மா எடுத்து வந்ததாகப் பொய் சாட்சியம் சொல்லச் செய்கிறார். இவர்கள் சொல்வது பொய் என்று அறிய எவ்வளவு நேரம் செல்லும் இறைவனுக்கு. பிரம்மாவைப் பூலோகத்தில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படி சபிக்கிறார். தாழம்பூ தன்னுடைய பூசைக்கே உரியதல்ல என்று இறைவனால் விலக்கப்படுகிறது. விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக் கொண்டதை மெச்சி அவருக்குத் தன் அடியையும் முடியையுமே காட்டுகிறார். அதற்காக அழல் உருவில் இருந்த இறைவன் மலை உருவில் குறுகுகிறார். அப்படிப் பொங்கழல் உருவனாக இருந்த இறைவனே அண்ணா மலையானாக மாறி நிற்கிறார்.

இப்படி ஒரு கதை, அண்ணாமலை என்னும் மலை பூவுலகில் தோன்றியதற்கு. இந்தக் கதையை எல்லாம் இன்றைய பகுத்தறிவாளர்கள் ஒப்புக் கொள்வார்களா? கதைக்குப் பின்னால் இருக்கும் தத்துவ உண்மையைச் சொல்லாவிட்டால். தன்னைப் படைத்துக் காத்து அழிக்கும் தலைவனான இறைவனைக் காண மனிதன் எவ்வளவோ காலம் முயன்றிருக்கிறான். மக்களுள் இரண்டு பிரிவினர். ஒருவர் செல்வத்தால் சிறந்த சீமான்கள்; மற்றவர் அறிவால் உயர்ந்த அறிஞர்கள். செல்வத்தால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை என்று செருக்குடையவர் செல்வந்தர். அறிவால் அறிய முடியாத செயல் ஒன்றும் இருக்கவே