பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மயிலின்மேல் ஆரோகணித்து முருகன் மலைமேலிருந்து இறங்கிவரும்போது கீழே இருந்து நோக்கினால், ஒரு பெரிய மயில் உண்மையிலேயே பறந்து வருவது போலவே நமக்குத் தோன்றும். இந்தத் தங்க மயில் வாகனக் காட்சி காண வேண்டுமானால் தைப்பூசத்தன்றாவது அல்லது பங்குனி மாதம் நடக்கும் பிரமோத்சவத்தில் ஐந்தாம் திரு நாளன்றாவது சென்று இரவு பத்துப் பதினோரு மணிவரை அம்மலையிலேயே காத்துக் கிடக்க வேண்டும். சும்மா கிடைக்குமா மயிலாசலன் பாதம்? இந்த மயில் மேல் வரும் முருகனைத் தரிசித்தால்,

எங்கும் தன் வடிவுஎன
விசுவரூபங் கொண்ட
சிறப்பொடு பிறப்பிலான்,
நம்பிறவி மாற்றவே
ஈசன் ஒரு மதலையானோன்,
அங்கை கொண்டு எட்டிப்
பிடிக்குமுன், முருகனுடன்
அம்புலி ஆடவாவே!
அயில்வேலன் மயிலம் வரும்
மயில் வாகனத்தன் உடன்
அம்புலி ஆடவாவே!

என்று சிதம்பர முனிவருடன் சேர்ந்தே நாமும் பாடலாம். பிள்ளைத்தமிழ் பாடிக்கொண்டே திரும்பலாம்.