பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

17

‘அதை இத்தனை பேருக்கு எதிரே சொல்லக்கூடாது இப்படி வாருங்கள்; நாளை இதே போட்டி இங்கே நடப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டை உடனே செய்யச் சொல்லுங்கள். அதற்குள் நான் இன்னோர் அழகியைத் தேடிப் பிடித்து, இவர்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறேன். அவளையும் அவள் அழகையும் பார்த்து இந்த இருவரில் எவள் மூர்ச்சை போட்டுக் கீழே விழாமல் இருக்கிறாளோ, அவளுக்கு முடி சூட்டி விடலாம். அதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயாரா?’ என்று சிட்டியாகப்பட்டவர் கேட்க, ‘தயார், தயார்!’ என்றனர் அழகிகள் இருவரும்.

அதன்படியே அழகிப் போட்டி அன்று தள்ளி வைக்கப்பட்டது. காண்க... காண்க... காண்க...

மறு நாள்.....

பழைய அழகிகளோடு புதிய அழகியும் சேர்ந்து மேடைக்கு வந்ததுதான் தாமதம், சிட்டி சொன்னது சொன்னபடி அந்தச் சண்டையிட்ட அழகிகள் இருவரில் ஒருத்தி ‘தடா’ரென்று மூர்ச்சை போட்டுக் கீழே விழலாயினள். அவளை வீட்டுக்குக் கொண்டு போங்கள்; முகத்தில் சில்லென்ற காற்று பட்டவுடன் அவள் மூர்ச்சை தெளிந்து விடும்’ என்ற சிட்டி, உடனே மிஸ்டர் விக்கிரமாதித்தரை அழைத்து, இன்னொருத்திக்கு முடி சூட்டச் சொல்வாராயினர்.

அதைக் கண்டு முதல் நாள் நீதிபதிகள் அத்தனை பேரும் மூக்கின்மேல் விரலை வைப்பது பழமை என்று கருதி, வேறு எதன்மேல் வைப்பது என்று தெரியாமல் தவிக்க, அதற்குள் அங்கே வந்த ‘மிஸ் இந்தியா’ அவர்களைப் பார்த்து ‘மிஸ்’ பண்ணாமல் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு செல்வாளாயினள்.

வழியில், ‘உண்மையில் நீ அழைத்துக் கொண்டு வந்த அழகியைப் பார்த்தா அவள் மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்தாள்?’ என்று சிட்டியைக் கேட்டார் விக்கிரமாதித்தர்.

மி.வி.க-2