பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

பெயர் சூரன். இந்த மூவரும் காலையில் அவளுக்காக அவள் குடிசையைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்; பகலில் வயற்காட்டைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்; மாலையில் அவள் குளிக்க வரும் ஆற்றங்கரையைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்.

அவளுடைய மேனியழகை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது மறைந்திருந்து பார்க்காவிட்டால் அவர்களுக்குத் தூக்கம் பிடிக்காது; அன்றைய ஏக்கமும் தீராது.

இப்படியாகத்தானே அவர்களுடைய ஏக்கம் அவர்கள் தூங்கும்போது தூங்கி, விழிக்கும்போது விழித்துக் கொண்டிருக்க, அவர்களில் ஒருவன் ஒரு நாள், ‘பெயரைத்தான் வீரன் என்றும், தீரன் என்றும், சூரன் என்றும் நாம் வைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, நம்மில் ஒருவனுக்காவது அந்தப் பெண்ணின் கையிலுள்ள அரிவாளைப் பிடுங்கி அப்பால் எறிந்துவிட்டு, அவளை அப்படியே கட்டிப் பிடித்து அவள் கன்னத்தில் ஓர் 'இச்' கொடுக்கத் தைரியமில்லையே?’ என்றான் பெருமூச்சுடன்.

‘அதை நினைத்தால்தான் எனக்கு வெட்கமாயிருக்கிறது!” என்றான் இன்னொருவன்.

'அதை நினைத்தால்தான் எனக்கும் வெட்கமாயிருக்கிறது!’ என்றான் மற்றொருவன்.

இவர்கள் மூவரும் இப்படி வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, ஒரு நாள் பண்ணையாராகப்பட்டவர் ராசாத்தியின் அழகிலே சொக்கி, 'ஏ, குட்டி! இன்னிக்குக் குளிச்சதும் என் வீட்டுக்குக் கொஞ்சம் வாயேன்!' என்று வாயெல்லாம் பல்லாய் வேண்ட, 'இன்னிக்குக் குளிச்சதும் உங்க வீட்டுக்கு வந்தா, நாளைக்கு நான் குளிக்காம இல்லே இருக்கணும்?' என்று அவள் முகம் சிவக்கத் தன் உடலை ஒரு முறுக்கு முறுக்கி நிற்க, 'அதுக்குத்தான் இப்போ லூப், காண்டோம்னு என்னவெல்லாமோ வந்திருக்கேடி!’ என்று அவர் அவளுக்குத் தைரியமூட்டுவாராயினர்.