பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

இருந்தார்கள். தர்மகர்த்தா சொன்னதுபோல் அவர்களைச் சுற்றிக் கூட்டம் என்னவோ சேரத்தான் சேர்ந்தது; அந்த ஐவரில் யார் ஜதி ஜகதாம்பாள் என்பதுதான் அர்ச்சகரால் தெரிந்துகொள்ள முடியாத புதிராயிருந்தது!

தெரிந்தவர்கள் யாரையாவது கேட்டுப் பார்க்கலாமென்றாலோ, அவர்களில் சிலர், 'ஜதி ஜகதாம்பாளையா உமக்குத் தெரியாது?’ என்று 'கெக்கெக்கே’ எனச் சிரிக்கக் கூடும்; இன்னும் சிலரோ, ‘ஏன், எதற்கு?' என்று குடையக் கூடும். அவர்களிடம் தான் என்னத்தைச் சொல்வது? 'நாலு பேருக்குத் தெரிந்து கொடுக்காதீர்; ரகசியமாகக் கொடும்!' என்றல்லவா அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்?

அர்ச்சகர் விழித்தார்; திகைத்தார்!

பூஜையை முடித்துக்கொண்டு போனபின், அவர்களுடைய வீட்டுக்கே போய் இதைக் கொடுத்துவிட்டு வரலாமென்றால், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? ‘அர்ச்சகரா தாசி வீட்டுக்குப் போகிறார்? அநியாயம்! அநியாயம்!' என்று நினைக்கமாட்டார்களா? பனை மரத்தின் அடியிலிருந்து பாலைக் குடித்தாலும் பனங்கள்ளைக் குடிக்கிறான் என்று தானே உலகம் நினைக்கும்?

‘அதெல்லாம் எதற்கு? அர்ச்சனை செய்ய வரும்போது எல்லோரையும் கேட்பதுபோல அவர்களையும் 'யாருடைய பெயருக்குச் செய்ய வேண்டும்?’ என்று கேட்டால் அவள் தன் பெயரைச் சொல்லாமலா இருக்கப் போகிறாள்? அப்போது தெரிந்துகொண்டால் போகிறது!’ என்று அர்ச்சகர் அதைச் செய்வதற்குத் தயாராக, அதற்குள் அங்கே வந்து சேர்ந்த அந்த நாரீமணிகள் தங்களுடைய பூக்குடலையிலிருந்து நைவேத் தியத்துக்கு வேண்டியவற்றை எடுத்துப் படுபவ்வியமாக அவரிடம் கொடுக்க, அவரும் அவற்றைப் படுபவ்வியமாகப் பெற்றுக்கொண்டு, ‘யாருடைய பெயருக்குச் செய்ய வேண்டும்?’ என்று கடாவ, 'சுவாமியின்