பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

அஞ்சு எழுத்து ஓதின் நாளும்
அரன் அடிக்கு அன்பதாகும்,
வஞ்சனைப் பால்சோறு ஆக்கி
வழக்கிலா அமணர் தந்த
நஞ்சு அமுதாக்கு வித்தார்
நனிபள்ளி அடிகளாரே!

என்பதுதான் அப்பர் தேவாரம். நல்ல அகச்சான்று தரும் பாடல் அல்லவா?

இத்தலம் நல்ல சரித்திரப் பிரசித்தி உடையது என்பதை முன்னரே அறிந்தோம். இக்கோயிலில் பதினெட்டுக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ராஜேந்திரன் வீர வெற்றியைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் உண்டு. அவன் காலத்தில் ரிஷப வாகன தேவர்க்குத் திருவிழா நடத்த இறையிலி ஒப்பந்தம் செய்யப்பட்டதெல்லாம் குறிக்கப் பட்டிருக்கிறது. இன்னும் விஜய நகரத்து கிருஷ்ண தேவராயன் மெய்க்கீர்த்திகளையெல்லாம் இக் கல்வெட்டுக்கள் கூறுவதால், கோயில் முன்பகுதி கோபுரம் எல்லாம் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த வட்டாரமே ஆதியில் பாலையாய் இருந்து, பின்னர் ஞான சம்பந்தரால் நெய்தல் நிலமாக்கப்பட்டு, அதற்கும் பின்னர் காடாகவும் வயல்களாகவும் மாறியிருக்கின்றன. இந்தத் தகவல் நமக்குப் பதினோராம் திருமுறை ஆளுடைய பிள்ளையார் அந்தாதியிலிருந்து கிடைக்கிறது. 'நாதன் நனிபள்ளி சூழ்நகர் கானமாகிய அஃதே போதில் மலிவயல் ஆக்கிய கோன்' என்றே ஞானசம்பந்தர் பாராட்டப்படுகிறார், இது என்ன பிரமாதமான காரியம் அவருக்கு. எலும்பையே பெண்ணுரு ஆக்கியவர் ஆயிற்றே. பாலையை வயலாக ஆக்குவதுதானா பிரமாதமாக காரியம்? தாயார் பிறந்த ஊரை நல்ல வளமுடையதாக்குவதில் அவருக்கு ஆவல் இராதா?