பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

153

ஒரு டாக்சியில் போட்டுக்கொண்டு போய், 'நீயாச்சு, உன் சித்தியாச்சு!' என்று அவள் வீட்டில் அவளைத் தள்ளி விட்டு வந்துவிட்டேன்!’ என்று மங்களம் தன் கதையைச் சொல்லி முடிக்க, ‘அப்புறம் என்ன ஆயிற்று?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, 'யாருக்குத் தெரியும்? இவரைக் கேளுங்கள்!' என்று அவள் கணவரைச் சுட்டிக் காட்ட, அவர் சொன்னதாவது:

மணவாளன் சொன்ன
மர்மக் கதை

‘கலியாணத்துக்குப் பிறகு கோபாலனையும் கோகிலத்தையும் இவள் பிரித்து வைத்தது எனக்கு அவ்வளவு உசிதமாகப் படவில்லை. ஆயினும், ‘படிப்பை உத்தேசித்துத் தானே பிரித்து வைக்கிறாள்?’ என்று நானும் ஒன்றும் சொல்லவில்லை; பையனும் ஒன்றும் சொல்லவில்லை.

இங்ஙனம் இருக்குங்காலையில், ஒரு நாள் உடனே தன் வீட்டுக்குப் புறப்பட்டு வருமாறு கோகிலத்தின் சித்தியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வர, 'என்னவோ, ஏதோ' என்று நானும் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடினேன்.

அங்கே கோகிலம் தலைவிரி கோலமாக ஊஞ்சல் பலகையின்மேல் உட்கார்ந்திருந்தாள். அவள் வயிறு கொஞ்சம் எடுப்பாயிருந்தது. 'அன்றையச் சாப்பாடு கொஞ்சம் ருசியாயிருந்து, ஒரு பிடி அதிகமாகச் சாப்பிட்டிருப்பாளோ, என்னவோ?’ என்று நினைத்த நான், 'அதை எப்படி அவ்வளவு வெளிப்படையாகக் கேட்பது?’ என்று எண்ணி, ‘என்ன உடம்புக்கு?’ என்றேன்.

அவ்வளவுதான்; விடுவிடுவென்று அங்கே வந்த அவள் சித்தி, 'அவளுடைய உடம்புக்கு என்ன கேடு? மூன்று மாதங்களாக அவள் முழுகாமல் இருக்கிறாளாக்கும்!' என்று என் தலையில் திடீரென்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டாள்.