பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

53

கொண்டு அதனிடையே பஞ்ச அக்கினியை வளர்த்துத் தவம் புரிகிறாள். (அடே இந்த வெண்ணெய் உருகியே பெண்ணை பெருகிற்று போலும்!) அப்படித் தவம் புரிந்து பேறு பெற்ற தலம் ஆனதனாலேதான் இத்தலத்துக்கு வெண்ணெய் நல்லூர் என்று பெயர். அம்மை அருள் பெற்ற கோயில் ஆனதனாலே கோயிலுக்கே அருள்துறை என்று பெயர் அமைகிறது.

இந்த வெண்ணெய் நல்லூருக்குத் தென் கிழக்கே ஏழு எட்டு மைல் தூரத்தில் நாவலூர் என்று ஒரு ஊர். அந்த நாவலூர்தான், சைவ சமயாச்சாரியார்களில் ஒருவரான சுந்தரர் பிறந்த ஊர். கைலையில் இறைவனுக்கு உகந்த தொண்டராக இருந்த ஆலால சுந்தரரே திருநாவலூரில் சடையனார், இசை ஞானியர் என்னும் நல்ல சைவத் தம்பதிகளின் தவப் புதல்வராக வந்து பிறக்கிறார். நம்பி ஆரூரர் என்று நாமகரணம் செய்யப்படுகிறார். அந்த நாட்டு மன்னர் நரசிங்க முனையரையரால் வளர்க்கப்படுகிறார். வளர்ந்து வாலிபப் பருவம் எய்திய இவருக்கு, நாவலூரை அடுத்த புத்தூரில் திருமணம் நடக்க ஏற்பாடு ஆகிறது. திருமணம் நடக்க இருக்கிற நேரத்திலே, ஒரு வயோதிக அந்தணர் 'இம் மணமகன் எனக்கு அடிமை, இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமைச் சீட்டு என்னிடம் இருக்கிறது. இவன் என் பணியாளனாக வேலை செய்தல் வேண்டும். மணம் முடித்தல் கூடாது' என்று இடை புகுந்து தடுக்கிறார். நம்பி ஆரூரர், 'இது என்ன பித்துக்குளித் தனம்? எங்காவது அந்தணன் வேறொரு அந்தணனுக்கு அடிமையாவதுண்டா ?' என்று மறுக்கிறார். ஆத்திரத்தில் கிழ வேதியர் நீட்டிய ஓலையையும் பிடித்து இழுத்துக் கிழித்து எறிந்து விடுகிறார். வலுத்த கிழவரும் சளைக்கவில்லை . 'இந்த நம்பி ஆரூரன் கிழித்தது நகல்தான், மூல ஓலை என்னிடம் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கிறது' என்று அங்கு இழுத்தே செல்கிறார். பேரவையைக் கூட்டித் தம்