பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கையை நீட்டி விடுவார். அந்த இறைவனும் இல்லை என்னாது கொடுக்கத் தயங்குவதில்லை. பழமலை நாதர் மற்றவர்களுக்குச் சளைத்தவரா, என்ன?

உம்பரும் வானவரும்
உடன்நிற்கவே எனக்கு
செம்பொனைத்தந்து அருளி
திகழும் முதுகுன்று அமர்ந்தீர்;
வம்பு அமரும் குழலாள்
பரவை இவள் வாடுகின்றாள்;
எம் பெருமான் அருளி
அடியேன் இத்தளம் கெடவே

என்று பாடினாரோ இல்லையோ, பொன்னை அள்ளிக் கொடுத்திருக்கிறார். இப்படி எளிதாகப் பொன்னைப் பெற்ற சுந்தரர் இன்னும் ஒன்றும் செய்திருக்கிறார். பொன்னை எப்படி அந்தத் தொலை தூரத்தில் உள்ள திருவாரூருக்குக் கொண்டு செல்வது? பொன்னைக் கட்டி மணிமுத்தாறு நதியில் போட்டிருக்கிறார், அதில் கொஞ்சம் மாற்றும் எடுத்துக் கொண்டு. அதற்கு மாற்றுரைத்த பிள்ளையாரை சாட்சி வைத்திருக்கிறார். இறைவனிடம் 'பழமலையானே! நீர் கொடுத்த பொன்னை இங்கே மணிமுத்தாற்றில் போட்டு விட்டேன், திருவாரூர் சென்று கமலாலயத்தில் கேட்பேன். அங்கு எடுத்துத் தரவேணும், என்ன சொல்கின்றீர்?' என்று கேட்டிருக்கிறார். 'சரி' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வார்? சொன்னது மாத்திரமா அப்படியே எடுத்தும் கொடுத்திருக்கிறார் கொஞ்சமும் மாற்றுக் குறையாமல். ஏதோ 'பாங்கு டிராப்ட்' ஒன்றும் வாங்காமலேயே பணத்தை ஓர் உரிலிருந்து மற்றோர் ஊருக்குக் கொண்டு போக, நல்ல வழி கண்டு பிடித்திருக்கிறார் சுந்தரர். இந்த சுந்தரர் மாத்திரமல்ல சம்பந்தர், நாவுக்கரசர் எல்லோருமே இந்தப் பழமலையானைப் பெரியநாயகியைப் பாடிப் பரவி யிருக்கிறார்கள். நாமும் பாடிப் பரவலாம், அங்கு சென்றால்.