பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

193

பெற்றது, மன்மதன் சாபம் நீங்கப் பெற்றது என்றெல்லாம் வரலாறுகள் விரியும். சங்கார சீலனைக் கொன்ற பைரவரே ஆபத்தோத்தாரணர் என்ற பெயரோடு சட்டைநாதர் திருவுருவில் அக்கினி திக்கில் கோயில் கொண்டிருக்கிறார்.

இத்துனை பெருமையுடைய இந்த அம்பர் இலக்கியப் பிரசித்தியும் உடையது என்று சொல்ல வேண்டும் என்பது ஊரில் உள்ளவர்கள் எண்ணம். அதற்கு ஒரு வரலாறும் கூறுவர். இங்குள்ள சிலம்பி என்னும் தேவதாசியிடம் ஆயிரம் பொன் கேட்டு அவள் கொடுத்த ஐந்நூறு பொன்னுக்கு அரைப்பாட்டு பாடி இருக்கிறான் கம்பன். பின்னர் வந்த ஔவை சிலம்பி கொடுத்த கூழைக் குடித்து விட்டுப் பாட்டைப் பூர்த்தி செய்திருக்கிறாள். முழுப்பாட்டும் இதுதான்.

தண்ணீரும் காவிரியே!
தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழ
மண்டலமே!-பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி
அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

‘அம்பொற்' சிலம்பியை அம்பர்ச் சிலம்பியாக்கித் தங்கள் ஊருக்குப் புகழ் தேடிக் கொள்கிறார்கள், அம்பர் ஊர்க்காரர்கள். அவர்கள் கெட்டிக்காரர்கள்தான்.

வே.மு.கு.வ-13