பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


அங்கே சென்னிமலை ஆச்சாரியைக் கண்டு, 'இந்தத் திருகுப்பூ நீங்கள் செய்ததுதானே?' என்று பிரபாகர் கேட்க, 'ஆமாம், நான்தான் செய்தேன்!' என்று அவர் சொல்ல, ‘யாருக்குச் செய்து கொடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?’ என்று அவன் பின்னும் கேட்க, 'கொஞ்சம் என்ன, நிறையவே சொல்கிறேனே! இது தன் தங்கைக்காக அண்ணன் செய்து கொடுத்த திருகுப்பூ!' என்று அவர் பின்னும் சொல்ல, ‘யார் அந்தத் தங்கை, யார் அந்த அண்ணன்?’ என்பதாகத்தானே அவன் கேட்க, 'தங்கை அபயம்; அண்ணன் ஆரூரான். அவன் தன் தங்கையையும் தாயையும் இங்கே தவிக்க விட்டுவிட்டு, 'இதோ இரண்டே வருடத்தில் வந்துவிடுகிறேன்!' என்று அந்தமானுக்குப் போனான்; இருபது வருடங்களாகியும் திரும்பி வரவில்லை. அவனைக் காணாத துக்கத்துடனேயே அவன் தாய் செத்தாள்; தங்கைக்குக் கலியாணமாகி அவளும் இப்போது ஒரு பெண்ணைப் பெற்று வைத்துக்கொண்டு, அதோ தெரிகிறதே, அந்தக் கோடி வீட்டில்தான் அவனுக்காகக் காத்திருக்கிறாள்!’ என்பதாகத்தானே அவர் சொல்லி, அவர்களுடைய வீட்டையும் அவனுக்குக் காட்ட, 'அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?’ என்று அவன் கேட்க, ‘தெரியுமே, தீபநாயகி!' என்று அவர் சொல்ல, ‘இந்தாருங்கள், ரூபா பத்து!’ என்று அவரிடம் பத்து ரூபா நோட்டொன்றை எடுத்துப் படுகுஷியுடன் நீட்டிவிட்டு, அவன் கடைத் தெருவை நோக்கி அவசர அவசரமாகச் செல்வானாயினன்.

அங்கே அந்தமானிலிருந்து அப்போதுதான் திரும்பிய அண்ணன்போல் அவன் தன் உடன் பிறவாத் தங்கைக்கும், அவள் தனக்காகப் பெற்று வைத்திருக்கும் மகளுக்கும் பழம், பலகாரம், துணி, மணி எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து, 'அபயம்! அம்மா, அபயம்!’ என்று ஆச்சாரி காட்டிய கோடி வீட்டுக் கதவைத் தட்ட, ‘யார் அது?’ என்று கேட்டுக்