பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

75

காரியத்தை, மனைவி கிழவியாகி விட்டாள் என்று தள்ளிவைத்து விட்டு, சின்னஞ்சிறு குமரியாம் மனைவியை மட்டும் பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாரே!' என்றெல்லாம் பேச வாய்ப்பாகச் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன அந்தக் கோயிலில்,

ஆனால் இந்தக் கதையில் கொஞ்சமும் உண்மையே இல்லை. ஆதாரமுமே இல்லை. அப்படி என்றால் இந்தக் கதை எப்படி எழுந்தது? விருத்தாசலத்திலே விருத்தாம்பிகை என்னும் பெரியநாயகிக்குத் தனி சந்நிதி, தனியே ஒரு கோயில். ஆனால், சுவாமி கோயிலிலே வடகிழக்கு மூலையிலே ஒரு சிறு சந்நிதி, அந்தச் சந்நிதியில் நிற்பவள் பாலாம்பிகை. இந்தப் பாலாம்பிகை இங்கே உருவானதே பதினாறாம் நூற்றாண்டிலேதான். கதை இதுதான்: கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலே குரு நமச்சிவாயர் என்ற பெரியார் திருவண்ணாமலையில் இருந்திருக்கிறார். அங்கிருந்தவர் தில்லையை நோக்கிப் புறப்பட்டு வரும் வழியில், இந்த விருத்தாசலம் என்னும் திரு முதுகுன்றத்துக்கு வந்திருக்கிறார். இங்குள்ள விருத்தகிரியார் என்னும் பழமலை நாதரையும், பெரியநாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலில் ஒரு பக்கத்தில் படுத்திருக்கிறார். நடுநிசியில் பசி வருத்தியிருக்கிறது. அவரோ அன்னையின் கருணையை நன்கு உணர்ந்தவர். தாயிடம் சோறு கேட்டால் கொடுப்பாள் என்று நம்பி,

நன்றி புனையும் பெரிய
நாயகி எனும் கிழத்தி,
என்றும் சிவனார்
இடக்கிழத்தி-நின்ற
நிலைக் கிழத்தி மேனி முழு
நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறுகொண்டு வா.