பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

129

வரும்?’ என்று ராமன் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்க, அவன் இல்லத்தரசி ஜானகியோ அந்தச் செய்தி வந்ததும் வாய் இனிக்க, மனம் இனிக்கக் குடிப்பதற்காக உள்ளே பால் பாயசம் காய்ச்சுவாளாயினள்.

இந்த விதமாகத்தானே எல்லாம் தயாராகிக் கொண்டிருக்க, வாசலைப் பார்த்துக்கொண்டிருந்த ராமன் திடீரென்று, 'ஜானகி! அடி, ஜானகி!’ என்று கத்த, ‘என்னங்க, அங்கிருந்து ஆள் வந்தாச்சா?’ என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டே ஜானகி ஓடி வர, அதற்குள் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்ட அவன், ‘மார்பை அடைக்குதடி, கொஞ்சம் தண்ணிர் கொண்டு வாடி?’ என்று ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டே கீழே விழுவானாயினன்.

‘கடவுளே! இது என்ன சோதனை?' என்று அதுவரை நினைக்காத கடவுளை அவசர அவசரமாக நினைத்துக் கொண்டு அவள் உள்ளே ஓடித் தண்ணீர் கொண்டு வர, அதை வாங்கி ஒரு வாய் குடித்த ராமன், 'தம்பி லட்சுமணா! நீ கண்ணை மூடுவாய் என்று நினைத்த நானே கண்ணை மூடுகிறேண்டா!' என்று முனகிக் கொண்டே தன் கண்ணை மூடித் தன்னுடைய மனைவியைத் தன் மேல் விழுந்து 'கதறு, கதறு’ என்று கதற வைத்துவிட்டுப் போவானாயினன்.

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘மனிதன் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று ஏன் நினைக்கிறது?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'தான் மனிதல்ல, தெய்வம் என்பதைக் காட்டிக்கொள்ளத்தான்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க... காண்க... காண்க.......

மி.வி.க -9