பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

173

ஆடுகிறான். பின்னர் அம்மை விரும்பிக் காப்பாற்றிய மயிலுருவில் அவள் எழுக என அருள் புரிகிறான். அவளுடன் கலைமகளும் அலைமகளுமே மயிலுருப் பெற்று எல்லோரும் சேர்ந்து ஆடுகின்றனர் இக்காவிரிக் கரையிலே. அம்மை மயிலாய் ஆடிய துறைதான் மயிலாடுதுறை. அம்மை பூஜித்த இறைவனே மயூரநாதர். அம்மையும் மயூரநாதரும் கோயில் கொண்டிருக்கும் இடமே மயூரம். அஞ்சி வந்த மயிலுக்கு அபயம் கொடுத்த அன்னையே அபயாம்பிகை, அஞ்சல்நாயகி என்றெல்லாம் தல வரலாறு கூறும். 'மதிநுதல் இமயச் செல்வி மஞ்ஞையாய் வழிபட்டு ஏத்தும் இது துலாப் பொன்னித் தானம்' என்றே பரவுவார் திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதியார்.

இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்; அப்பர் வந்திருக்கிறார். அப்பர் இம்மயிலாடுதுறைக்கு ஒரு தனிப் பதிகமே பாடியிருக்கிறார். அதைவிட அழகாக எந்த எந்தத் துறைகளில் எல்லாம் இறைவன் தங்கியிருக்கிறான் என்ற நீண்ட ஜாபிதாவையே கொடுக்கிறார் திருத்தாண்டகத்திலே.

கயிலாய மலை எடுத்தான்
கரங்களோடு சிரங்கள் உரம்
நெரியக்கால் விரலால் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை
தென்பாலைத்துறை, பண்டெழுவர்
தவத்துறை, வெண்துறை, பைம்பொழில்
குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை,
பூந்துறை, பெருந்துறையும்
குரங்காடு துறையினோடும்
மயிலாடுதுறை, கடம்பந்துறை,
ஆவடுதுறை, மற்றுந்துறை
அனைத்தும் வணங்குவோமே