பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தண்ணீரும் சோறும் தருவான்
திருப்பனந்தாள் பட்டனே.

என்பது பாட்டு, இந்தப் பட்டனைப்பற்றி நாம் கேட்பதெல்லாம் கர்ண பரம்பரையில்தான். ஆனால் இன்று ‘ரிக்கார்டு' பூர்வமாகத் தானங்கள் செய்யும் ஓர் அடிகளாரை அங்கு பார்க்கிறோம்நாம். திருப்பனந்தாள் மடாதிபதியைத் தான் குறிப்பிடுகிறேன், இன்று மடாதிபதியாக இருப்பவர்கள் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ அருள்நந்தித்தம்பிரான் சுவாமிகள். சென்ற பதினாறு வருஷ அருளாட்சியில் அவர்கள் செய்துள்ள தருமங்கள் எண்ணில் அடங்கா. திருமுறை வளர்ச்சிக்கு, கல்வி அபிவிருத்திக்கு, அன்ன தானத்துக்கு, வைத்தியத்துக்கு இன்னும் என்ன என்ன காரியங்களுக்கு எல்லாமோ மொத்தம் 290 தருமங்களுக்கென ரூ.59, 70,745 வரை வழங்கியிருக்கிறார்கள். இந்தக் கணக்கு சரியானது அல்ல. இவ்வளவும் 1960 மார்ச்சு மாதம் முடியும் வரைதான். அதற்குப்பின் தான் பல வருடங்கள் கழிந்து விட்டனவே. இன்னும் எத்தனை லக்ஷம் இந்த இடைக்காலத்தில் கொடுத்திருக்கிறார்களோ நான் அறியேன். பிறர்க்கு உதவும் தருமங்கள் செய்யாத நாளெல்லாம் பிறவா நாள் என்று கருதுபவர்கள் ஆயிற்றே அவர்கள், அவர்களது அறங்கள் ஓங்க, பணி சிறக்க எம்பெருமான் செஞ்சடையப்பனை இறைஞ்சுகின்றேன். ஒரேயொரு விஷயம். பணம் படைத்த மற்றவர்கள் எல்லாம் பணத்தை இறுக்கி முடிந்து வைத்துக்கொண்டிருக்கும் போது இந்த மடாதிபதி மட்டும் இப்படி வாரி வழங்குவதன் ரகசியம் என்ன என்று பல தமிழ் அன்பர்கள் எண்ணுகிறார்கள் என்பது வாஸ்தவம்தான். 'இற்றைச் செய்தது மறுமைக்கு ஆகுமா?' எண்ணுபவர்கள்தான் மற்றவர்கள். அருள்நந்தி அடிகளோ இற்றைச் செய்வது இற்றைக்கே ஆகட்டும் என்ற திடமான கொள்கையுடையவர் என்று தெரிகிறது. அதில் பெறுகின்ற ஆத்ம திருப்திக்குமேல் வேறு திருப்தி உண்டா ?