பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வேங்கடம் முதல் குமரி வரை

மண்டபத்துக்குப் போனோம். காலை எட்டு மணியாவதற்கு முன்னமேயே கூட்டம் கூடிவிட்டது கோயில் பிராகாரத்தில். அந்த ஊரில் உள்ளவர்கள் பக்கத்து ஊரில் உள்ளவர்கள், ஆண் பெண் குழந்தைகள் அடங்கலும் திரளாக வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேர் அங்கே கூடியிருந்தார்கள். எல்லோர் கையிலும் ஒவ்வொரு செம்பு. பணக்காரர்கள் வெள்ளி கூஜா வைத்திருந்தார்கள். கோயிலின் பரம்பரை தர்மகர்த்தரான தருமபுர ஆதீனத்து மகாசந்நிதானம் அவர்களும் அவர்களது பரிவாரம் புடைசூழ எழுந்தருளியிருந்தார்கள். நாங்களோ நல்ல ஒரு கைப்பிடிச் சுவரில் ஏறி நின்றுகொண்டோம்.

சரியாய் ஒன்பது மணி அளவில், உற்சவ மூர்த்திகளான தோணியப்பர், பெரிய நாயகி சகிதம் இரண்டு பெரிய சப்பரங்களில் வெளியில் வந்தார்கள். அதே சமயத்தில் ஒரு சிறிய அழகான பல்லக்கில் ஞானசம்பந்தர் அவருக்கு என்று ஏற்பட்ட கோயில் உள்ளேயிருந்து வெளியே வந்தார். ஞான சம்பந்தர் வந்ததும் பெரிய நாயகியை ஞானசம்பந்தர் பல்லக்குக்கு அருகில் கொண்டு வந்தார்கள். அம்மையின் மடிமீது வெள்ளிக் கலசத்திலிருந்த பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுக்கும் பாவனையில் அர்ச்சகர்கள் பரிமாறினார்கள், அவ்வளவு தான்; அந்த நேரத்தில் உற்சவம் காண வந்திருந்த அன்பர்கள் அனைவரும் அவரவர் கொண்டு வந்திருந்த செம்புப் பாத்திரங்களை, வெள்ளி கூஜாக்களைத் தலைக்கு மேலே தூக்கினர். அப்படித் தூக்கி நிவேதனம் பண்ணிவிட்டு ஒவ்வொருவரும் அந்த இடத்திலேயே, செம்பிலிருந்த பாலைத் தாமும் உண்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். பால் செம்பு கொண்டு போகாத எங்களுக்குமே, ஆதினத் தலைவர் பால் கொடுக்க மறக்க வில்லை. நானும் என்னுடன் வந்த நண்பர்களுமே பாலை உண்டு மகிழ்ந்தோம். கூட்டத்தை விட்டு வெளியில் வந்தோம். வெளியே வந்ததும் அமெரிக்க நண்பர் கேட்டார்: 'இது எல்லாம் என்ன?' என்று, அவருக்கு விளக்கினேன், கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு