பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

பூவார் சோலையில் மயில்கள் ஆடுகின்றன. புரிந்து குயில்கள் இசை பாடுகின்றன. இந்தப் பண்ணுக்கும் பரதத்துக்கும் ஏற்றவாறு நடமாடிக்கொண்டே நடக்கிறாள் கன்னியாம் பொன்னி. இவள் தம் பெருமையை இளங்கோ மட்டும் அல்ல, கவிச் சக்கரவர்த்தி கம்பனும் பாடிப் பாடி மகிழ்கிறான், 'கங்கை என்னும் கடவுள் திருநதி' என்று கங்கையைப் பாராட்டியவன், 'தெய்வப் பொன்னியே பொருவும் கங்கை' என்றுதான் பொன்னிக்கு ஏற்றம் கூறுகிறான். இத்துடன் நிறுத்தினானா? 'கங்கையிற் புனிதமாய காவிரி' என்றல்லவா முத்தாய்ப்பு வைக்கிறான். இது என்ன சொந்த நாட்டு அபிமானத்தால் எழுந்ததா? இல்லை. இதில் ஏதாவது உண்மை உண்டா ? அதைத் தெரிய வேண்டுமானால் துலாக் காவேரி மகாத்மியத்தையே புரட்ட வேண்டும்.

காவிரியில் குளிப்பதற்குக் காலம் இடம் எல்லாம் பார்க்க வேண்டியதில்லைதான். என்றாலும் குடகு நாட்டிலே தலைக் காவிரியிலே குளிப்பதைவிட, அரங்கத்து அரவணையான் கோயிலுக்கும் மேற்கே அகண்ட காவிரியிலே குளிப்பதைவிட மாயூரத்திலே குளிப்பது விசேஷம். அதிலும் ஆடி பதினெட்டில் அவள் ஆண்டு நிறை பூப்ப மெல்ல நடக்கும்பொழுது அவளிடம் நீராடுவதை விட, ஐப்பசியாம் துலா மாதத்திலே மாயூரத்திலே ஸ்நானம் பண்ணுவது விசேஷம். மேலும் இந்தத் துலா மாதத்திலே மற்ற இருபத்தொன்பது நாட்கள் குளிக்கத் தவறினாலும், முப்பதாம் நாளாகிய கடைசி நாளன்று தவறாது குளிப்பது மிக மிக விசேஷம். அன்று நடக்கும் விழாதான் கடைமுக ஸ்நானம். இத்தனை விசேஷம் இந்தத் துலா ஸ்நானத்துக்கு வருவானேன்? அதையே தெரிந்து கொள்ளலாம் முதலில்.

கண்ணுவ மகரிஷி கங்கையில் நீராடும் விருப்பத்துடன் நடக்கிறார் வடக்கு நோக்கி. வழியிலே மூன்று சண்டாளக் கன்னிகைகளைச் சந்திக்கிறார். 'அவர்கள் யார்? ஏன் சண்டாளர்களாக இருக்கிறார்கள்?' என்று