பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வேங்கடம் முதல் குமரி வரை

ஒன்றுமே வைக்கவில்லை, பாகம் பண்ணுவதற்கு ஒன்றுமே இல்லை' என்கிறான். தம்பி ஊரில் உள்ள பெரியவர்களிடம் முறையிடுகிறான், ஊராரும் தம்பிக்குப் பரிந்து பேசுகிறார்கள். ஆனால், அண்ணனோ ஒன்றுமே தன்னிடம் இல்லை என்று சாதிக்கிறான். ஊராரும் தம்பியும் 'அப்படியாயின் திருவாமாத்தூரில் உள்ள வட்டப் பாறைக்குச் சென்று அதில் கைவைத்துச் சத்தியம் செய்து கொடுக்கட்டும்' என்கிறார்கள். அந்த வட்டாரத்திலே மக்கள் சிக்கலான வழக்குகளில் தீர்ப்புக் காண வட்டப் பாறையைத் தான் நம்பி இருந்தார்கள்.

பாறையில் கை வைத்து யார் பொய்ச் சத்தியம் செய்தாலும், பாறை வெடித்து நாகம் ஒன்று கிளம்பிப் பொய்ச் சத்தியம் செய்தவரை மடிய வைத்து விடும் என்பது நம்பிக்கை. அண்ணன் இணங்குகிறான், வட்டப் பாறையில் சத்தியம் செய்து கொடுக்க. ஊரார் புடைசூழ அண்ணன் தம்பி எல்லோருமே வட்டப் பாறை வந்து சேர்கிறார்கள். பாறையை நெருங்கியதும், தன் கையில் வைத்திருந்த தடி ஒன்றைத் தம்பி கையில் கொடுத்து விட்டு, அண்ணன் 'எங்கள் குடும்பத்தில் முன்னோர் தேடி வைத்த பொருள் ஒன்றுமே என்னிடம் இப்போது இல்லை' என்று சொல்லி வட்டப் பாறையைத் தொட்டுச் சத்தியம் செய்கிறான். ஊராரும் தம்பியும் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை . அண்ணன் உண்மையே சொல்லி யிருக்கிறான் என்று நம்புகிறார்கள். தம்பி கையில் கொடுத்த தடியைத் திரும்ப வாங்கிக் கொண்டு அண்ணன் நடக்கிறான். எல்லோரும் ஊர் நோக்கித் திரும்புகிறார்கள்.

நாலு மைல் தூரம் வந்ததும் திடீரென்று அண்ணன் முன்னிருந்த சிறிய பாறை ஒன்று வெடிக்கிறது. அதிலிருந்து ஒரு நாகம் தோன்றி அவனைத் தீண்டி விடுகிறது. அங்கேயே விழுந்து சாகிறான் அவன். அவன் கையிலிருந்த தடியும் கீழே