பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

73

நாளன்று கரைஏறவிட்ட குப்பத்தில் திருநாளாகவே சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

எங்கெல்லாமோ சென்ற சுந்தரர் இத்தலத்துக்கு வந்தார் என்று வரலாறு இல்லை. ஆனால் மணிவாசகர் இங்கு வந்ததாக வரலாறு உண்டு. வாதவூர் அடிகளாம் மணிவாசகர் இத்தலத்துக்கு வரும்போது கெடில நதியிலே வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. நதியைக் கடக்க முடியவில்லையே என்று வருந்தி அக்கரையிலேயே அன்ன ஆகாரம் இல்லாமல் நின்றிருக்கிறார் அவர். ஈசனைக் காணாமல் மணிவாசகருக்கு அவ்விடத்தை விட்டு நகர மனமில்லை.

அடியார்களின் துயர் தீர்ப்பதே தனது பணியாகக் கொண்ட இறைவன் ஒரு சித்தர் வடிவத்தில் மணிவாசகர் முன் தோன்றி அவருக்காக நதியை வடபால் போகும்படி செய்து, கோயிலுக்குக் கூட்டிவந்து, பாடலவனநாதனைத் தரிசிக்க வகை செய்து மறைந்திருக்கிறார்.

மணிவாசகர் விரும்பிய வண்ணமே, கங்கையும் கெடிலமும் கலந்த ஒரு தீர்த்தமாக சிவகர தீர்த்தத்தையும் அமைத்திருக்கிறார் அந்தச் சித்தர்.

கலை வளர்க்கும் கோயில் வரிசையில் இக்கோயில் இன்று இடம் பெறாது என்றாலும் தோன்றாத் துணையும் அருந்தவநாயகியும் கோயில் கொண்ட தலம் என்பதால் பிரசித்தி உடையதுதானே. அதிலும் சமயக் குரவர்களில் வயதால் மூத்த நாவுக்கரசருக்கும் நல்வாழ்வு கொடுத்த பதியாயிற்றே. ஆதலால், 'கரையேறவிட்ட பிரான் ஒரு பாகம் வளர் கருணைப் பிராட்டியாள், தரையேறு புகழ்ப் புரிசை பெரிய நாயகி சரணம் தலைமேல் கொண்டு' திரும்பலாம் இங்கு சென்றால், என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.