பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தான்; பிரம்பால் அடிபட்டான், மாமனாக வந்து வழக்குரைத்தான் என்று பேசினார்கள். மீனாக, ஆமையாக, ஏன் ஆண்டாள் சொல்வதுபோல் 'மானமிலாப் பன்றி' யாகக்கூட இங்கே வந்தான்; 'அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் பிறந்து' வெண்ணெய் திருடி, கடை கயிற்றால் கட்டுண்டு, நந்த கோகுலத்தில் விளையாடினான் என்று நம்பினார்கள். கடவுள் எங்கேயோ நெடுந்தொலைவில் கைலாசத்திலோ, பரமபதத்திலோ, பரலோகராஜ்யத்தில் மட்டும் இருப்பதாக அவர்கள் எண்ணவில்லை. எல்லா இடங்களும், எல்லா நிலைகளும், அவனைக் காணத் துடிக்கும் இந்த மனித உள்ளமும், அவனுடைய இராஜ்யம் என்றே கருதினார்கள். அவர்களுக்குத் திருவையாறு கைலாயம் ஆயிற்று. திருக்கோவலூர் வீட்டு இடைகழி பரமபதமாக மாறியது. பல்வேறு காலங்களில், பல்வேறு தலைமுறைகளில், தமது வாழ்க்கையோடு பின்னிக்கிடக்கும் கடவுள் என்ற சத்தியத்தை, அந்த வாழ்க்கையை ஒளியாகக்கொண்டு, நமது முன்னோர்கள் தொட முயன்றார்கள். 'ஒரு நாமம், ஓருருவம், ஒன்றுமிலார்க்கு' ஆயிரம் ஆயிரம் பெயர் சூட்டித் தெள்ளேணம் கொட்ட முற்பட்டார்கள். எல்லா உறவுகளையும் கடந்த ஒன்றை அது இங்கும் உள்ளது என்ற உணர்வோடு, மனித உறவுகளைக் கொண்டு தேடிக் கண்டார்கள். அன்பெனும் வலையில் அகப்படும் இறைவனுடைய எளிமையை வியந்து பரவினார்கள். எத்தனை எத்தனையோ உருவகங்களால், மனித வாழ்க்கைச் செய்திகளால் அலகிலா அவனை அலகிட்டுச் சிக்கெனப் பிடித்தார்கள். இந்த முயற்சியின் விளைவுதான் புராணக்கதை.

நண்பர் தொண்டைமான் இதை நன்றாக அறிந்தவர். ஆகவேதான், இறைவனைத் தொட்டுத் தொட்டு விளையாடும் புராணக் கதைகளின் விதவிதமான உணர்ச்சிகளையெல்லாம், கனிவோடு, நகைச்சுவையோடு, அவரால் காண முடிகிறது. இதனால், ஏதோ இறைவனுக்குக் குறைவு வந்துவிடும் என்று அவர் எண்ணவில்லை.