பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வேங்கடம் முதல் குமரி வரை

வர்மனும், சைவ சமயமே சமயம் என உணர்ந்து சைவனாகிறான். இந்த நாவுக்கரசராம் நல்லவர் வாழ்க்கை யோடு தொடர்பு கொண்ட நற்பதியே இத்திரு அதிகை.

இனி கோயிலுக்குள் நுழையலாம். வான் நோக்கி உயர்ந்த இந்தக் கோபுர வாயிலின் இரு பக்கமும் பரத சாத்திரத்திலுள்ள நூற்று எட்டுத் தாண்டவ லட்சணங்களை விளக்கிக் கொண்டு பெண்கள் நிற்கிறார்கள், இதை யெல்லாம் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய வெளி முற்றம். அங்கே தென்பக்கம் சங்கர தீர்த்தம். வடபக்கம் ஒரு புத்தர் சிலை. அடே! இந்தத் தலத்தில் ஜைனர்கள் மாத்திரம்தான் இருந்தார்கள் என்று இல்லை. பௌத்தர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களையும் வெல்ல வேண்டியிருக்கிறது அப்பருக்கு.

இந்த முற்றத்தையும், அதன்பின் இடை வரும் இடைவழிக் கோபுரத்தையும் கடந்துதான் பிரதான கோயிலுக்குள் நுழைய வேண்டும். கோயிலினுள் நுழைந்ததும் இடப் பக்கம் திரும்பினால் தனித்ததொரு மாடத்தில் செப்புச் சிலை வடிவில் பெரிய உருவிலே நாவுக்கரசர் நிற்கிறார். சமீப காலத்தில் வடித்த செப்பு விக்கிரகமாகவே இருக்க வேண்டும். வடித்த சிற்பி அவனுக்கு இருந்த ஆர்வத்தில் ஒரு பெரிய தவறு செய்திருக்கிறான். அப்பர் ஏந்தியிருக்கும் உழவாரப் படையின் முகப்பிலே சிவலிங்கத்தையே அமைத்திருக்கிறான். இதை அப்பர் கண்டிருப்பாரானால் கடிவதோடு நின்றிருக்க மாட்டார். எனக்கு மட்டும் ஒன்று தோன்றுகிறது. 'நின்ளாவார் பிறர் இன்றி நீயே ஆனாய்' என்று பாடியவர் தானே அவர். ஆதலால் அவர் ஏந்திய உழவாரத்திலும் சிவபெருமான் இருக்கத்தானே வேண்டும். அதை வடித்துக் காட்டிய சிற்பியைக் கோபித்துக் கொள்வானேன் என்று அவரையே கேட்டிருப்பேன்.

இனி அப்பரைப் பார்த்த கண்ணுடனேயே அப்பரின் தமக்கையார் திலகவதியாரையுமே பார்த்து விடலாம்.