பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“அகோ, வாரும் பிள்ளாய்!”

வழக்கத்திற்கு விரோதமாக ஒரு நாள் என்னைக் கண்டதும், "அகோ, வாரும் பிள்ளாய்" என்றார் ‘தினமணி கதி’ரின் பொறுப்பாசிரியரான திரு. சாவி அவர்கள்.

"அடியேன் விக்கிரமாதித்தனா, என்ன? என்னை 'அகோ, வாரும் பிள்ளாய்!' என்கிறீர்களே?" என்றேன் நான்.

"அது தெரியாதா எனக்கு? ‘பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளைப் பின்பற்றி 'மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ என்று எழுதினால் எப்படியிருக்கும்?"

"பேஷாயிருக்கும்"

"சரி, எழுதும்!"

"என்னையா எழுதச் சொல்கிறீர்கள்?"

"ஆமாம்."

"எந்த எழுத்தாளரும் தமக்கு உதித்த யோசனையை இன்னொருவருக்கு இவ்வளவு தாராளமாக வழங்கி நான் பார்த்ததில்லையே?"

"அதனால் என்ன, என்னிடம் யோசனைக்குப் பஞ்சமில்லை; எழுதும்!" என்றார் அவர்.

"நன்றி!" என்று நான் அவருடைய யோசனைக்கு நன்றி தெரிவித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒராண்டு காலம் அது ‘கதி’ரில் தொடர்ந்தது. பலர் அதை விழுந்து விழுந்து படிக்கவும் செய்தார்கள்; சிலர் அதற்காக என் மேல் விழுந்து விழுந்து கடிக்கவும் செய்தார்கள்.