பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


அவளுடைய தாயார் ஒன்றும் புரியாமல், 'அவர் எங்கே கஸ்தூரி? நீ ஏன் தனியாக வந்தாய்?' என்று அவளைக் கேட்க, ‘அந்த அக்கிரமத்தை உன்னிடம் எப்படியம்மா, சொல்வேன்? அவரும் நானும் பட்டணத்தில் உள்ள ஓர் ஓட்டலில் தங்கியிருந்தோம். நள்ளிரவில் யாரோ இருவர் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி, எங்களிடமிருந்த நகை நட்டுக்களையும் பணத்தையும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்கள். ‘அவர்களைப் பற்றிப் போலீசில் புகார் செய்துவிட்டு வாருங்கள்; ஊருக்குப் போவோம்’ என்றேன் நான். 'எந்த முகத்தோடு என்னை நீ அங்கே வரச்சொல்கிறாய்? நீ வேண்டுமானால் முதலில் போ; நான் பின்னால் வருகிறேன்' என்று சொல்லி அவர் என்னை மட்டும் ரயிலேற்றி அனுப்பி விட்டார்!' என்றும் 'அது தான் காந்தி வழி' என்று நினைத்து, அளந்து வைப்பாளாயினள்.

அதை நம்பி அவள் தாய் அவனுக்காக ஒரு மாதம் காத்திருந்தாள்; இரண்டு மாதங்கள் காத்திருந்தாள்; மூன்று மாதங்களும் காத்திருந்தாள். அவன் வரவில்லை; வரவே இல்லை.

எப்படி வருவான். பர்மாக்காரி ஒருத்தி அவனுக்கு அங்கே ஆசைநாயகியாக இருந்தாள். அவளுக்காகவே அவன் அடிக்கடி இந்தியாவுக்கு வந்து, பெண்ணைப் பெற்றவர்கள் யாராவது ஏமாந்தால் அவர்களுடைய பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டு, 'பர்மாவுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன்’ என்று பட்டணத்துக்கு வந்து, ஏதாவது பொய் சொல்லி அவள்மேல் இருக்கும் நகை நட்டுக்களை யெல்லாம் கழற்றிக் கொண்ட பின், அவளை நடுத் தெருவில் விட்டுவிட்டுப் பர்மாவுக்கு ஓடிவிடுவது வழக்கம். இது தெரியாத கஸ்தூரி, தன் அம்மாவுக்குத் தெரியாமல் அவனுக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினாள். அவற்றில் ஒரு கடிதம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது, அவன் செய்து விட்டுப் போன அயோக்கியத்தனத்தை அவள்