பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

கேட்பது வழக்கம்!” என்று அவர் விளக்க, அதன் மூலம் ‘நட்சத்திரக் கணவன்’ என்ற அந்தஸ்தைத் தான் எப்படியோ எட்டிப் பிடித்துவிட்டதை உணர்ந்த இவர் சோளக்கொல்லைப் பொம்மைபோல் சிரிக்க, அருகிலிருந்த சாமுத்திரிகா லட்சணி அவருடைய தலையில் ஆசையுடன் ஒரு தட்டுத் தட்டி, “கேளுமய்யா, சந்திரவர்ணரே! இதுவே நம் கலியாணம் செய்துகொள்வதற்கு ஏற்ற தருணம். வாரும், உடனே திருப்பதிக்குப் போவோம்!” என்று அன்றே அவரை அழைத்துக் கொண்டு போய்க் ‘கலியாணம்’ என்று ஒன்றையும் செய்து கொண்டு, கள்ள மதுவும், கள்ளப் பணமும் போல வாழ்ந்து வரலாயினள்.

இப்படியாகத்தானே இருந்து வருங்காலையில், ஒரு நாள் சாமுத்திரிகா லட்சணிக்குத் தெரியாமல் ஓர் உப நடிகையுடன் சந்திரவர்ணராகப்பட்டவர் சற்றே சல்லாபம் செய்து கொண்டிருக்க, அதற்கு முழு முதல் காரணமாயிருந்த அவருடைய கார் டிரைவர் ஏதும் அறியாதவன் போல் அதைப் பார்த்து ஒரு தினுசாகச் சிரிக்க, “இந்தாப்பா, இதை வைத்துக் கொள்; அம்மாவிடம் சொல்லாதே!” என்று அவர் அவனிடம் ஒரு நூறு ரூபா நோட்டை எடுத்து நீட்ட, “அம்மா இப்படி யாருடனாவது இருந்தா, உங்ககிட்டே சொல்ல வேணாம்”னு இருநூறு ரூபா கொடுப்பது வழக்கமாச்சுங்களே!” என்று அவன் தலையைச் சொறிய, “அப்படியா சங்கதி?” என்று அவர் அந்தக் கணமே சாமுத்திரிகா லட்சணியோடு சகல மனைவியரையும் வெறுத்துத் தூக்க மாத்திரைகளின் துணையால் ஒரேடியாய்த் தூங்கிப் போக, அப்போது சாமுத்திரிகா லட்சணியின் தயவில் மேற்படிப்பு படிப்பதற்காக வெளிநாடுகள் பலவற்றுக்குப் போயிருந்த அவருடைய புத்திர சிகாமணிகளில் ஒருவரான விக்கிர மாதித்தனாகப்பட்டவர் ‘ஏ டு இஸட்’ வரை உள்ள எல்லாப் பட்டங்களையும் பெற்றுத் திரும்பி, உத்தியோகங்கள் பல தன்னைத் தேடி வந்தும், ‘தொழுதுண்டு வாழ மாட்டேன். உழுதுண்டு இளைக்க மாட்டேன்!’ என்று வள்ளுவரைப்