பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

வேங்கடம் முதல் குமரி வரை

மாயூரத்தை யடுத்த குற்றாலம், ஆடுதுறை, இல்லை திருவிடைமருதூர் ஸ்டேஷனில் இறங்கிப் பத்துமைல் வண்டியில் வரலாம். எல்லா வழிகளுமே மண்பாதைகள்தாம். அவற்றில் வண்டிகள் மாத்திரமே போகும். மாயூரம் திருவாரூர் ரயில் பாதையில் பூந்தோட்டம் ஸ்டேஷனில் இறங்கி ஆறுமைல் மேற்கே வந்தாலும் இத்தலம் வந்து சேரலாம். இல்லை, கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் வந்து அங்கிருந்து கிழக்கே திரும்பி ஏழு எட்டு மைல் வந்தாலும் திருவீழிமிழலை வந்து சேரலாம். எனக்கு என்னவோ இத்தனை வழிகளுமே சௌகரியமானதல்ல என்றுதான் தோன்றுகிறது. கும்பகோணத்தில் இறங்கி அங்கிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் பஸ் பிடித்தோ, கார் ஏற்பாடு பண்ணியோ சென்றால் பன்னிராண்டாவது மைலில் புதூர் வந்து சேருவோம். அங்கிருந்து தெற்கே திரும்பி இரண்டு மைல் வந்தால் கிழக்கே ஒரு பாதை பிரியும். அங்கே ஒரு கோபுரம் தெரியும். ஆனால் அது திருவீழிமிழலை இல்லை. விசாரித்தால் அது தான் கோனேரிராஜபுரம் என்பார்கள். இதனையே தேவாரத்தில் நல்லம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு தானே அந்தப் பிரபலமான நடராஜர் இருக்கிறார் என்பதும் ஞாபகத்துக்கு வரும். ஆதலால் அந்தப் பாதையிலே திரும்பிக் கோயில் முன்னுள்ள சக்தி தீர்த்தத்தையும் வலம் வந்தால் கோயில் வாசல் வந்து சேருவோம்.

கோயிலுள் நுழைந்து உமாமகேசுவரரையும், மங்கள நாயகியையும் தரிசிக்கும் முன் மகா மண்டபத்தையொட்டிய ஒரு மண்டபத்தில் நடராஜர் திருவுருவைக்காண்போம், செப்புச்சிலைவடிவில். செப்புச்சிலை என்றால் ஏதோ மூன்று அடி நான்கடி உயரம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. கீழே பீடத்திலிருந்து திருவாசிவரை ஒன்பது அடி உயரம். ஆறு அடி அர்ச்சகர் பக்கத்தில் நின்றால் நடராஜரது தோள் உயரம் கூட இருக்கமாட்டார். நடராஜ ருக்கு ஏற்ற