பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

255

இனி கிழக்கு நோக்கியிருக்கும் கோயிலை நோக்கி நடக்கலாம். முதலிலே கோயில் வாயில் என்று ஒன்று இருக்காது. அங்கு கோபுரம் ஒன்றும் அழகு செய்யாது. என்றாலும் முன்னால் ஒரு வாயிலும் கோபுரமும் இருந்து இடிந்து விழுந்திருக்கவேண்டும் என்பது மட்டும் தெரியும். கொள்ளிடத்தில் அணைகட்டியபோது இங்குள்ள கற்களை எல்லாம் இடித்து எடுத்துப்போய் உபயோகித்துக் கொண்டனர் என்பதும் பிரசித்தம். (உத்திரமேரூரில் குடவோலைச் சாஸனமுள்ள கற்களையே பெயர்த்து எடுத்து இன்று மக்கள் வீடு கட்டுகிறார்கள் என்றால், அன்றிருந்த ஆங்கில சர்க்கார் அதிகாரிகள், இக்கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில் மதில்கற்களை அணைகட்டுவதற்கு உபயோகித்துக் கொண்டார்கள் என்பதில் வியப்பு என்ன?) இன்று இடிந்து கிடக்கும் மதில் சுவர் கிழமேல் 584 அடி, தென்வடல் 372 அடி.ஆனால் கங்கை கொண்ட சோழன் இதைவிட விஸ்தாரமாக ஆறு கோபுரங்களுடன் சுற்றாலைகள் எல்லாம் அமைத்தான் என்பர் அங்குள்ளவர்கள்.

அது எல்லாம் எவ்வளவு உண்மையோ? இன்றிருக்கின்ற கோயிலே பிரும்மாண்டமானதாக இருக்கிறது. வெளிப்பிரகாரத்தில் கல்லாலும் சுதையாலும் கட்டப்பட்டபிரும்மாண்டமான நந்தி ஒன்றும், அதை ஒட்டிச்சிங்கமுகக் கிணறு ஒன்றும் இருக்கும். இந்தக் கோயில் பிராகாரத்தில் வலம் வருவதும் கொஞ்சம் கஷ்டம். உறுத்தும் கல்லுக்கும் அழுத்தும் நெருஞ்சி முள்ளுக்கும் 'ஜவாப்' சொல்லவேண்டியிருக்கும். இதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் வலம் வரவேணும். தெற்குப் பிரகாரத்தில் இருநூறு அடி வந்ததும், அங்கு எழுந்திருக்கும் விமானத்தைப் பார்க்கலாம். விமானம் நூறு அடி சதுரத்தில் தரையிலிருந்து இருபது அடிவரை உயர்ந்து அடிப்பீடத்தின் மேல் கர்ப்பகிருஹத்தின் மேல் 170 அடி உயரம் எழுந்திருக்கிறது. பிரும்மாண்டமான அப்பீடத்தின் பேரில் எழுந்து நிற்பதால், தஞ்சைப் பெரிய கோயில் விமானத்தில்